Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்று கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கூட்டாகச் சேர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 4ஆம் நாளாகப் போராடி வரும் நிலையில், சென்னை எழிலகத்தை முற்றுகையிட்டுப் போராட முயற்சி செய்தனர். அப்போது ஆசிரியர்களில் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
என்னதான் பிரச்சினை?
2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது.
அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் சுமார் ரூ.16,000-க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் என்று திமுக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 311ஆவது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.
கூட்டாகச் சேர்ந்து சாலை மறியல் போராட்டம்
எனினும் இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்று கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கூட்டாகச் சேர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் ஆசிரியர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அதேபோல மேலும் பல இடைநிலை ஆசிரியர்கள், மெரினா கடற்கரை அருகே காமராசர் சாலை, சிவானந்தா சாலை மற்றும் உழைப்பாளர் சிலை முன்பு திடீரெனக் குவிந்தனர். அப்போது அவர்களைக் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். இதில் ஆசிரியர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மயக்கம் அடைந்ததால் பரபரப்பு
வர மறுத்த ஆசிரியர்கள் சிலரை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். அதில் சிலர் மயக்கம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் முதல்வர் அமைச்சர்கள் செல்லக்கூடிய காமராஜர் சாலையில் சுமார், ஒன்றேகால் மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இது அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளது.






















