கே.எஸ்.ரவிக்குமார் வெற்றிகரமான இயக்குனராக ஜொலித்தது இப்படித்தான்! புட்டு புட்டு வைத்த சேரன்!
கே.எஸ்.ரவிக்குமார் வெற்றிகரமான இயக்குனராக உலா வந்தது எப்படி? என்று இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் சேரன். இவர் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கே.எஸ்.ரவிக்குமார் வெற்றிகரமான இயக்குனராக நீண்ட காலம் ஜொலித்தது எப்படி? என்பது குறித்து சேரன் மனம் திறந்து பேசியுள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெறுவது எப்படி?
சேரன் இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, நாட்டாமை எல்லாம் வேலை பார்க்கும்போது இரட்டை வேடம். சரத்குமார் சார். அந்த இரண்டு கதாபாத்திரம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சாதாரணமா இரட்டை கதாபாத்திரம் பண்ற படங்கள் எடுப்பதற்கு 80 நாட்கள், 90 நாட்கள் ஆகும். நாங்கள் நாட்டாமை படத்தை 52 நாளில் முடித்துவிட்டோம்.

புரியாத புதிர் படத்தை 23 நாளில் முடித்தோம். சேரன் பாண்டியன் படத்தை 32 நாளில் முடித்தோம். என்னவென்றால் நாங்கள் அவ்வளவு வேகம். இயக்குனர் அவ்வளவு தெளிவா என்ன வேணும் அப்படிங்குறதை போட்டுக் கொடுத்துவிடுவார். அப்போ நாங்கள் வேலை செய்வது எளிதாக இருக்கும்.
பட்ஜெட் மேலே போகாது:
இன்னைக்கு செட்டுக்கு வந்துதான் ஒரு காட்சியை சொல்றாங்க. அதையும் என்னனு சரியா சொல்ல முடியலங்குறப்ப உதவி இயக்குனர்களுக்கு என்ன பண்ணப்போறோம்னே தெரியாது. ஆனால், எங்களுக்கு அத்துப்படி. ஏனென்றால், அவர் சீன் ஆர்டர்போடும்போதே ஒரு சீனோட லென்த் போடுவாரு. இந்த காட்சி எவ்வளவு நேரம் படத்துல வரனும். இந்த சீன் 10 நிமிஷம் படத்துல வரனும். இந்த சீன் 2 நிமிஷம் போதும். அவ்வளவுதான். அதுக்குள்ளதான் எடுப்பாரு.
இப்படி பண்ணும்போது இவ்வளவுதான் காட்சி என்றால் அதுக்கேற்ற துரிதமான வேலைகள் இருக்கும். அதுக்கேத்த திட்டமிடல் இருக்கும். அதுக்கேத்த பொருட்செலவு இருக்கும். அப்போ, எங்கள் இயக்குனர் எடுத்த படங்கள் எதுவுமே திட்டமிட்ட பட்ஜெட்டுக்கு மேல போகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர்களுக்கு சொன்ன நாட்களுக்குள் சொன்ன செலவில் படத்தை எடுத்து முடிக்கும் இயக்குனர்கள் மிக மிக குறைவு ஆகும். அவர்களில் கே.எஸ்.ரவிக்குமார் முதன்மையானவர்.
தவிர்க்க முடியாத இயக்குனர்:
கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமான புரியாத புதிர் படம் முதல் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சேரன். கே.எஸ்.ரவிக்குமாரின் புரியாத புதிர், சேரன் பாண்டியன் மற்றும் நாட்டாமை ஆகிய படங்களில் சேரன் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
கே.எஸ்.ரவிக்குமார் குறைந்த பட்ஜெட்டில் நல்ல வருவாயில் திரைப்படங்களை கொடுத்த காரணத்தாலே அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தது. ஃப்ளாப் இல்லாமல் நல்ல வருவாயில் படங்களை அடுத்தடுத்து தந்தவருக்கு நாட்டாமை மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து ரஜினியின் முத்து படத்தை இயக்கினார்.

ரஜினிக்கு முத்து, படையப்பா ஆகிய மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசனுக்கு அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம், தசாவதாரம் ஆகிய வெற்றிப்படங்களை அளித்துள்ளார். கார்த்திக்கிற்கு பிஸ்தா, அஜித்திற்கு வில்லன் , வரலாறு, சரத்குமாருக்கு சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சூர்யாவிற்கு ஆதவன் ஆகிய வெற்றிப்படங்களை அளித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.





















