Crazy Mohan : "சுடுகாட்டில்தான் என் வாழ்க்கை தொடங்கியது" கிரேஸி மோகன் நினைவு நாள் இன்று
நடிகர் , வசனகர்த்தா , இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட கிரேஸி மோகனின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று
இன்று வசனகர்த்தா கிரேஸி மோகனின் 5-வது ஆண்டு நினைவு நாள்.
கிரேஸி மோகன்
எம்.ஐ.டி யில் கல்லூரி ஆண்டு விழாவில் 'The Great Bank Robbery' என்கிற நாடகம் தான் கிரேஸி மோகனின் முதல் பெரிய மேடை அனுபவம். அதன் பிறகு அவர் எழுதிய கிரேஸி தீவ்ஸ் இன் பாலக்காட் நாடகம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதுவரை மோகன் ரங்கராச்சாரியார் என்று அழைக்கப்பட்டவர் இந்த நாடகத்திற்கு பிறகு தான் கிரேஸி மோகன் என்று பிரபலமானார்.
அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும் , சாக்லெட் கிருஷ்ணா , மேரேஜ் மேட் இன் சலூன் , மீசை ஆனாலும் மனைவி என கிரேஸி மோகன் எழுதிய பல நாடகங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன.
சினிமாவிற்கு கூட்டி வந்த பாலச்சந்தர்
கிரேஸி மோகனை சினிமாவிற்கு அழைத்து வந்தது இயக்குநர் சிகரம் பாலச்சந்தர். கிரேஸி மோகன் எழுதிய மேரேஜ் மேட் இன் ஹெவன் நாடகத்தை 1983 ஆம் ஆண்டு பொய்க்கால் குதிரை என்கிற படமாக எடுத்தார் பாலச்சந்திரன். இப்படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இப்படத்திற்கு கிரேஸி மோகனை வசனம் எழுதவைத்தார். ஆனால் இப்படம் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா படத்திற்கு அவரை வசனம் எழுத ஒப்பந்தம் செய்தார்.
ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்திற்கு அவர் எழுத முடியாமல் போனது.
சுடுகாட்டில் தொடங்கிய வாழ்க்கை
சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டு தனது வேலையை விட்டு திருந்த கிரேஸி மோகன் ஒரு நாள் தன் வீட்டு அருகில் இருக்கும் கூட்டமாக இருப்பதை கவனித்தார். அது கமலின் நாயகன் படத்தின் ஷூட்டிங் . கூட்டத்தில் இருந்து வந்த கமல் கிரேஸியை அழைத்து தனது அடுத்த படத்திற்கு வசனம் எழுதச் சொல்லி அழைத்தார். அந்த படம் தான் அபூர்வ சகோதரர்கள்.
எல்லாருக்கும் வாழ்க்கை சுடுகாட்டில் முடியும் எனக்கு அங்கு தான் தொடங்கியது என்று கிரேஸி மோகன் விளையாட்டாக சொல்வாராம்.
கமல் - கிரேஸி மோகன் காம்போ
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கிரேஸி மோகன் மற்றும் கமலின் காம்போ மிகப்பெரிய ஹிட் அடித்தது. இங்கு தொடங்கிய கூட்டணி மகளிர் மட்டும், சதிலீலாவதி, மைக்கெல் மதன காம ராஜன் , அவ்வை சன்முகி , தெனாலி , பஞ்சதந்திரம், வசூல் ராஜா என கொடி கட்டிப் பறந்தது.
ஒரு வார்த்தை. அந்த வார்த்தையை இன்னொருவர் தவறாக புரிந்துகொள்ள அதனால் ஏற்படும் குழப்பங்கள், என கிரேஸி மோகனின் காமெடிகள் சுழற்றி அடிக்கக்கூடியவை. ஆங்கிலத்தில் Pun என்று சொல்லப்படும் நகைச்சுவை தான் கிரேஸி மோகனின் தனித்துவம்.
ரஜினியுடன் கூட்டணி
ராகவேந்திரா படத்தில் கிரேஸி மோகனை வசனம் எழுத வைக்கும் ரஜினியின் ஆசை நிறைவேறவில்லை. இதனால் சுந்தர் சி இயக்கிய அருணாச்சலம் படத்தில் வசனம் எழுத வைத்தார். இப்படத்தில் ரஜினிக்கு அடிக்கடி சொல்லும் ஒரு பஞ்ச் லைன் தேவைப்பட்டது. அப்போது கிரேஸி மோகன் கொடுத்த ஐடியா தான் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்.
சுமார் 30 நாடகங்களையும் 40-க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் கிரேஸி மோகன். இவை தவிர்த்து 100 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மாரடைப்பால் கிரேஸி மோகன் உயிரிழந்தார். ஆனால் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் அளவிற்கு தனது வசனங்களை விட்டுச் சென்றிருக்கிறார். போட்றா அந்த பஞ்சதந்திரம் படத்த...