Vaathi: தனுஷின் ‘வாத்தி’ படத்தை வாங்க வேண்டாம்; விநியோகஸ்தர்களுக்கு அறிக்கை மூலம் எச்சரிக்கை!
வாத்தி படத்தின் ஐந்து ஏரியா வினியோக உரிமை ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால், இடைத்தரகர்கள் பேச்சைக் கேட்டு, விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம்!
'வாத்தி' திரைப்படத்தின் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் பலர் ஆர்வம் காட்டினர். முன்னதாக, டிசம்பர் 2 ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் 5 ஏரியாக்களுக்கு விநியோக உரிமையை பெறுவதற்கு கேட்டுள்ளது.
அத்துடன் ஆகஸ்ட் மாத முடிவிலேயே வாத்தி திரைப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் பேசியுள்ளது. அதன்படி விநியோகத்திற்கு ரூ.8 கோடி என ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது. அதற்காக ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் ரூ.3 கோடி முன்பணம் கொடுத்துள்ளது.
ஆனால், தயாரிப்பு நிறுவனம் கூறியப்படி தீபாவளி முடிந்தும் ஒப்பந்த வேலைகளை எதுவும் முன்னெடுக்காமல் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டது. முன்பணமாக கொடுக்கப்பட்ட பணத்தை திரும்ப தருவதாக கூறிய தேதிக்குள் பணத்தை கொடுக்கமால் நவம்பர் 23 ஆம் தேதி ரூ 2 கோடியை மட்டும் கொடுத்துள்ளது.
இதனால் கோபமடைந்த ஆரண்யா சினி கம்பைன்ஸ் 'தங்களது முன்பணம் தயாரிப்பு நிறுவனமிடமுள்ளது. எனவே காப்புரிமை சட்டப்படி திரைப்படத்தின் விநியோகம் எங்களுக்கு தான் சொந்தம்’ என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இது குறித்து ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,"வாத்தி திரைப்படம் முதலில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஐந்து ஏரியாக்களுக்கு படத்தை வெளியிடுவதற்கு 8 கோடி ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரூ 5 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. தீபாவளிக்கு பின்னர் ஒப்பந்தம் போடலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் கூறியது.
குறிப்பிட்ட தேதியில் ஒப்பந்தமும் போடபடவில்லை படத்தையும் கூறிய தேதியில் வெளியிடவும் இல்லை. இதனால், முன்பணத்தை திருப்பித் தருமாறு கேட்டோம். அதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் நவம்பர் 23 ஆம் தேதி 2 கோடி ரூபாய் மட்டும் கொடுத்து பின்னர், 1 கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தனர்.
ஆனால் இப்போது வரை பணத்தை தரவில்லை. திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படத்தை நாங்களே வெளியிட முடிவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை அணுகினோம். ஆனால் எங்களுக்கு உரிய பதில் கிடைக்காததால் நீதிமன்றத்தை அணுகினோம். காப்புரிமை சட்டப்படி தற்போதைய நிலையில், வாத்தி படத்தின் ஐந்து ஏரியா வினியோக உரிமை ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால், இடைத்தரகர்கள் பேச்சைக் கேட்டு, விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம்." என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.