Deva in Dhanush 50: கேங்கஸ்டர் சாம்ராஜ்யத்தில் புதுவரவு... தனுஷ் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் இசையமைப்பாளர் தேவா?
தனுஷ் படத்தில் வில்லனாக பிரபல தமிழ் இசையமைப்பாளர் தேவா அறிமுகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
D50
தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயில் இந்தப் படம் உருவாகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள நிலையில், சென்னையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் வரையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் வரிசையாக வெளிவந்தபடி இருக்கின்றன. என்னை அறிந்தால் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன் சமீபத்தில் இந்தப் படத்தில் இணைந்தார். இந்நிலையில், இப்படத்தின் வில்லன் நடிகர் குறித்தான ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துதுள்ளார் நடிகர் தனுஷ்.
வில்லனாகும் இசையமைப்பாளர்
முன்னதாக தனுஷ் நடித்த மாரி படத்தில் பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார். தற்போது தனது 50 ஆவது படத்திற்காக பிரபல இசையமைப்பாளரான தேவாவை தனது படத்தில் வில்லனாக நடிக்க தனுஷ் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு தேவா சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்தில் பல பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
D51
இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் சேகர் கம்முலா இயக்கும் தனது 51ஆவது படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க நடிகர் நாகர்ஜுனா வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
கேப்டன் மில்லர்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.
பிரியங்கா மோகன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.