‛எங்கு எது நடந்தாலும்... நான் நினைத்ததை நடத்திக் கொண்டிருப்பேன்’ - ஜாலி மோட் நித்தியானந்தா!
உலகத்துல ஆயிரம் பிரச்சனை இருக்கு. ஆனாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தானும் கொண்டாடி, தன்னை சார்ந்தவர்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.
‛இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட... தோத்துட்ட...ன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது" இந்த டயலாக்... விவேகம் படத்தில் தல அஜித் பயன்படுத்தும் டயலாக். ஆனால் உண்மையில் இந்த டயலாக் படி வாழும் ஒரே நபர், கைலாஷ் அதிபர் நித்யானந்தா மட்டுமே. புகாரில் இருக்கிறார், தேடப்படுகிறார், தலைமறைவாக உள்ளார். இதையெல்லாம் கடந்து, குற்றவாளி என்கிற குகைக்குள் சிக்காமல், ஒரு நாட்டின் அதிபராக மாறி தனக்கென ஒரு நாடு, தனக்கென தனி அதிகாரம், தனக்கென தனி சட்டம் என வாழ்ந்து கொண்டிருக்கும் நித்யானந்தா, எப்போது தமிழ்நாட்டின் ஆச்சரியம் தான்.
எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சியிருந்தும், இன்றுவரை நித்யானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது தான் நித்தியானந்தாவின் கெத்து. இதையெல்லாம் பெருமையாக சொல்வதா, வேதனையாக சொல்வதா என்றால்... அதுவும் நித்யானந்தாவின் வெற்றி தான். ஏன் வெற்றி என்கிறோம்? எந்த பிரச்சனையும் இல்லாமல், அன்றாட நிகழ்வுகளை எந்த நெருடலும், இடையூறும் இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் எனக்கு தெரிந்து நித்தியானந்தா தான்.
சமூக வலைதளத்தில் அடுத்தடுத்து போட்டோக்கள், தினசரி பூஜைகள், நவராத்திரி விழா, நவரச விழா என மனிதர் எந்நேரமும் ஒரே ஜாலி மூட் தான். ‛கங்கா... சந்திரமுகி ரூமுக்கு வந்தா.. சந்திரமுகி முன்னாடி நின்னா... சந்திரமுகியா மாறினா...’னு ரஜினி சொல்ற மாதிரி தான் நித்தியானந்தாவும். கடவுளாகவே தன்னை பிரகடனப்படுத்தி, கடவுளாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் நித்தியானந்தாவின் சமீபத்தில் இம்சை... நவராத்திரி போட்டோ செஷன். 9 நாட்கள் நடக்கும் நவராத்திரி விழாவில், தினமும் ஒரு கோலத்தில் வந்து தன் பக்தர்களை கோலாகலப்படுத்திக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தார். அவரது அமரும், நிற்கும், நடக்கும் கோலங்கள் பற்றி ஊருக்கே தெரியும். தற்போது நவராத்திரிக்கும் வேறுவிதமான போஸ் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தார்.
ஒரு பக்கம் ஐபிஎல்., அலப்பறைகள், இன்னொரு புறம் உள்ளாட்சி தேர்தல், வழக்கம் போல கொரோனா அப்டேட், போதாக்குறைக்கு நிலக்கரி தட்டுப்பாடுனு நாட்டுல, உலகத்துல ஆயிரம் பிரச்சனை இருக்கு. ஆனாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தானும் கொண்டாடி, தன்னை சார்ந்தவர்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. நான்ஸ்டாப் நவசரநாயகனாக உலா வரும் நித்தியானந்தா... வரவிருக்கும் பூஜை விழாக்களில் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று காத்திருக்கும் ஒரு கூட்டம். சாதாரண பூஜையை கூட விழாவாக கொண்டாடும் நித்தியானந்தா... பூஜை பண்டிகையை சும்மாவா விடுவார்!