Coolie Box Office: கூலிக்கு அடித்த ஜாக்பாட்... மீண்டும் அதிகரிக்கப்போகும் ரஜினியின் வசூல் வேட்டை - எப்படி?
Coolie Box Office: ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் கூலி கடந்த 14ம் தேதி வெளியானது. அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
அதிகரிக்கப்போகும் கூலி வசூல்?
எந்தவொரு போட்டியும் இல்லாமல் வெளியான இந்த படம் தொடர் விடுமுறை ஆகியவற்றாலும், நட்சத்திரங்கள் நடித்திருந்ததாலும் கலவையா விமர்சனங்களைப் பெற்றாலும் படம் 400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்த நிலையில், கூலி படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

அதாவது, சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை, அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது. இதனால், திரையரங்குகளில் மீண்டும் கூலி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது 400 கோடி ரூபாய் வசூலை கடந்த கூலி படம் 500 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தி, தெலுங்கில் வரவேற்பு:
கூலி படத்தில் அதிகளவு சண்டைக் காட்சிகள் இருப்பதால் ஏ சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியுள்ளது. இதனால், ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று பார்ப்பது இயலாத காரியமாக மாறியுள்ளது. பொதுவாக குழந்தைகள், பெண்கள் என குடும்பங்களுடன் சென்று ரஜினி படத்தை ரசிகர்கள் பார்ப்பது வழக்கம் ஆகும்.
ஆனால், கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதுவும் கூலி படத்தின் வசூல் தொய்வு நிலை ஏற்பட்டதற்கு ஒரு காரணம் ஆகும். அதேசமயம், தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்தி மற்றும் தெலுங்கில் கூலி படத்திற்கு நல்ல வரேவற்பு கிடைத்துள்ளது.
பெரிய படங்கள் நோ ரிலீஸ்:
இந்தியில் நேரடியாக வெளியான வார் 2 படத்திற்கு சவால் விடும் வகையில் கூலி படம் அமைந்துள்ளது. மேலும், தெலங்கானா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரஜினி ரசிகர்களுடன் நாகர்ஜுனா ரசிகர்களும் படத்தை வெற்றிப்படமாக மாற்றியுள்ளனர்.

சென்னை, லக்னோ, பெங்களூர், ஹைதரபாத் போன்ற நகரங்களில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரவேற்பு எதிர்பார்த்ததை விட நன்றாகவே கிட்டியுள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் எந்தவொரு பெரிய நடிகரின் படமும் திரைக்கு வராததால் ரஜினிகாந்தின் கூலி திரையரங்கில் தடையில்லாமல் ஓடும் சாதகமான சூழல் உள்ளது.
ரூ.1000 கோடி சாத்தியமா?
ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த 1000 கோடி ரூபாய் வசூலை படம் எட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், படம் அடுத்த ஒரு வாரத்திற்கு தடையின்றி வசூல் வேட்டையை நடத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.




















