Shrutika Mom: தேங்காய் ஸ்ரீனிவாசன் பையன கிட்னாப் பண்ணதா எழுதுனாங்க: ஸ்ருத்திகா அம்மா பகிர்ந்த லவ் ஸ்டோரி!
Shrutika mom : 40 ஆண்டுகளுக்கு முன் மிகவும் தைரியமாக வீட்டை விட்டு ஓடிப்போய் தேங்காய் ஸ்ரீனிவாசன் மகனை கல்யாணம் செய்து கொண்ட கதையை ஸ்வாரஸ்யமாக பகிர்ந்துள்ளார் ஸ்ருத்திகாவின் அம்மா கல்பனா.
தமிழ் சினிமாவில் 70ஸ், 80ஸ் காலக்கட்டத்தில் ஒரு ஹீரோவாக, காமெடியனாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக என பலவிதமான எமோஷன்களை அசத்தலாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகராக வலம் வந்தவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன். இவர் ஆரம்பக் கட்டத்தில் ஒரு நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீனிவாசன் என அழைக்கப்பட்டார்.
தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி :
நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி ஸ்ருத்திகா தன்னுடைய 14 வயதிலேயே ஒரு நடிகையாக என்ட்ரி கொடுத்தவர். சூர்யா ஜோடியாக 'ஸ்ரீ' படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் அவரால் பெரிய அளவுக்கு சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் சின்னதிரையில் என்ட்ரி கொடுத்த ஸ்ருத்திகா அதற்குப் பிறகு மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக மாறிவிட்டார்.
தன்னுடைய துறுதுறுப்பான வெகுளித்தனமான பேச்சால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள ஸ்ருத்திகா தற்போது ஸ்ருத்திகாஸ் கிச்சன் என்ற யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்துள்ளார்.
அம்மா - பொண்ணு சமையல்!
அந்த வகையில் சமீபத்தில் குக்கிங் வீடியோ ஒன்றில் தன்னுடைய அம்மா கல்பனா உடன் இணைந்து ஸ்ருத்திகா மிகவும் ஜாலியாக சமைத்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக உள்ளது. அந்த வீடியோவில் ஸ்ருத்திகா தன்னுடைய அம்மாவின் காதல் கதையை பற்றி சொல்லச் சொன்னார். கல்பனாவும் மிகவும் அழகாக அவர்களின் லவ் ஸ்டோரியை சொல்ல, அந்த வீடியோ படு சூப்பராக இருந்தது.
அம்மாவின் காதல் கதை :
"அப்போ சங்கர் ரொம்ப சின்ன பையன். அவனுக்கு 19 வயசு தான். வழக்கமான தென் இந்திய ஆள். ஆனா நான் பஞ்சாபி பொண்ணு. எனக்கு அப்போ வயசு 23. என்னை விட நான் வயசுல கம்மி. நானும் சங்கரும் ஊரைவிட்டு ஓடிப் போயிட்டோம். எங்களை எல்லாரும் தேடுனாங்க. பேப்பர்ல நியூஸ் வந்தது. யாரோ அவனைக் கடத்திட்டாங்க, ஒரு பொண்ணு சங்கரை கிட்னாப் பண்ணிடுச்சுனு நியூஸ் பேப்பர்ல வருது. அதைப் பார்த்து நான் பீச்ல விழறதுக்குப் போனேன். சங்கர் தான் என்னைக் காப்பாத்தி கூட்டிட்டு வந்தான்.
இங்க வந்து பார்த்தா அடுத்த பூகம்பம் காத்துகிட்டு இருந்துது. போலீஸ் என்கிட்ட விசாரிக்கிறாங்க. “நீ அந்தப் பையனை கடத்திட்டு போனியா?' அப்படினு கேட்டாங்க. போய் அவன்கிட்ட கேளுன்னு சொல்லிட்டேன். அவனும் நானும் லவ் பண்ணி தானே போனோம். அப்புறம் என்ன கிட்னாப் பண்ணியானு கேக்குறாங்க. உன்னோட லவ் ஸ்டோரி எல்லாம் வேஸ்ட். இப்போ சொல்லு யாரோட லவ் ஸ்டோரி பெஸ்ட்ன்னு" எனப் பேசி உள்ளார் ஸ்ருத்திகாவின் அம்மா கல்பனா. இது தான் ஸ்ருத்திகா அம்மாவின் காதல் கதை. அதை மிகவும் ஸ்வாரஸ்யமாக கூறி இருந்தார்.
ஸ்ருத்திகாவே குழந்தை போல பேசுகிறார் என்றால் அவரின் அம்மாவோ சரியான டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் கூலாக இந்த வீடியோவில் பேசியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் இந்த வீடியோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.