Vimal: இவர்தான் எல்லாத்துக்கும் பொறுப்பு.. மோசடிப் புகாருக்கு விளக்கம் அளித்த நடிகர் விமல்..!
விமலுக்கு எதிராக மோசடி புகார் எழுந்த நிலையில், சிங்காரவேலன் என்பவர்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என அவர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விமல் 5 கோடி தராமல் மோசடி செய்து விட்டதாக சினிமா தயாரிப்பாளர் புகார் கொடுத்த நிலையில், - “சிங்காரவேலன் என்பவர்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. அவர் எனக்கு எந்த பணமும் தரவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான கோபி என்பவர் சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தார்.
அதில் அவர், “களவாணி, களவாணி-2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் விமல். இவர் மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக ரூ.5 கோடி வாங்கினார். அந்தப் படத்தின் லாபத்திலும் பங்கு தருவதாக தெரிவித்தார். ஆனால் என்னிடம் வங்கிய கடன் தொகை ரூ.5 கோடியை நடிகர் விமல் திருப்பித்தரவில்லை. அவர் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடியை திருப்பித்தராமல் மோசடி செய்துள்ளார். பணத்தை கேட்டால், அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவர் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடி பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.