Vasuki Actress : நான் கஷ்டப்படுறேன்.. ஆனால் தற்கொலை செஞ்சுக்க மாட்டேன்.. நடிகை வாசுகி
நடிகை வாசுகி என்றால் யார் என்று தெரியாதவர்கள் கவுண்டமணி காமெடியில் பிச்சை எடுத்து வங்கியில் சேர்த்து வைக்கும் கேரக்டரை யோசித்தால் அடையாளம் தெரிந்துவிடும்.
நான் கஷ்டப்படுகிறேன்... ஆனால் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்று நடிகை வாசுகி கூறியுள்ளார். நடிகை வாசுகி என்றால் யார் என்று தெரியாதவர்கள் கவுண்டமணி காமெடியில் பிச்சை எடுத்து வங்கியில் சேர்த்து வைக்கும் கேரக்டரை யோசித்தால் அடையாளம் தெரிந்துவிடும். தமிழ், தெலுங்கு என சின்னச்சின்ன வேடங்களில் நடித்துவந்தவர் தான் நடிகை வாசுகி. இவர் அண்மையில் தான் பாஜகவில் இணைந்தார். இணைந்த வேகத்திலேயே இப்போது அவர் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். விரைவில் திமுகவில் சேர உள்ளதாகவும் கூறியுள்ளார். அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் அவர் எல்லாவற்றையும் மறுத்துள்ளார். தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் வறுமை காரணமாக அவ்வாறு பேசும்படி ஆகிவிட்டது. மற்றபடி மனதில் ஏதும் இல்லை. குடும்பம் இல்லை, குழந்தை இல்லை, வாழ்வாதாரமும் இல்லை என்ற சூழலில் ஏதோ பேசிவிட்டேன். அதற்காக நான் முதல்வரிடம், உதயநிதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அந்தப் பேட்டியில் அவர், என் பெயர் வாசுகி. நான் கவுண்டமணி, செந்திலுடன் நிறைய படங்களில் நடித்துள்ளேன். காமெடி வேஷங்களில் நடித்தேன். 2001ல் அதிமுகவில் தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர் ஆனேன். நான் படங்களில் நடித்த போது வெறும் 500, 5000, 10ஆயிரம் சம்பளம் வாங்கிய நான் எப்படித்தான் அதை வைத்து சொத்து சேர்க்க முடியும் என நினைக்கிறீர்கள். எனக்கு பெரிதாக சம்பாத்தியமில்லை. அதிமுகவில் சேர்ந்த பின்னர் ஒருவருடன் காதல் உண்டானது.
ஆனால் அவர்கள் வீட்டில் காதலை ஏற்கவில்லை. இருந்தாலும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தோம். அது ஒத்துவரவில்லை. என் கணவர் எப்போது பார்த்தாலும் குடி போதையில் இருந்தார். என் மீது வன்முறைகளை ஏவினார். இதனால் ஒரு கட்டத்தில் நான் அவரிடமிருந்து பிரிந்தேன். அவரும் தற்கொலை செய்து கொண்டார்.பாஜகவில் கடசியில் சேர்ந்தால் பணம் கொடுப்பதாக சொன்னதால் பாஜகவில் இணைந்தேன். இப்போது நான் எனது தவற்றை எல்லாம் உணர்ந்து கொண்டேன். இனி நிச்சயமாக திமுகவில் இணையப் போகிறேன். முதல்வரிடம் என் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
என் அப்பா சினிமாவில் இருந்தா. எம்ஜிஆர் சினிமாக்களில் பணியாற்றினார். அப்பாவுடன் சினிமா சூட்டிங்குக்கு சென்றுதான் எனக்கு சினிமா ஆசையே வந்தது. ஆனால் சினிமாவில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்பா எம்ஜிஆருடன் பழகியும் அவர் எம்ஜிஆரிடம் இருந்து எதுவும் பெற்றத்தில்லை. எதுவுமே சேர்த்து வைக்காமல் அப்பா சென்றுவிட்டார். நான் ஏதோ நடித்துப் பிழைத்தேன். இப்போது வயதாகிவிட்டது. உழைக்க தெம்பில்லை. சினிமா, சீரியல் வாய்ப்புகளும் இல்லை. இப்படியான சூழலில் நான் என்ன செய்வதென்று சொல்லுங்கள். பாஜகவில் கடசியில் சேர்ந்தால் பணம் கொடுப்பதாக சொன்னதால் பாஜகவில் இணைந்தேன். அம்மா இருந்தவரை எனக்கு குறையில்லாமல் இருந்தது. அவர்கள் போன பின்னர் நானும் திக்கற்று போனேன். ஆனால் இப்போது முதல்வரை பார்க்க நிறைய முறை முயற்சி செய்தும் எதுவும் வாய்க்கவில்லை. இந்த சேனல் மூலமாக நான் முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு வாழ வழி வேண்டும். நான் கஷ்டப்படுகிறேன்... ஆனால் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் . அது கோழைத்தனம். இவ்வாறு வாசுகி உருக்கமாகப் பேசியுள்ளார்.