Visweswara Rao Passed Away: பிதாமகன் பட புகழ்! பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
உன்னை நினைத்து, பிதாமகன் , ஈ உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இன்று அதிகாலை காலமானார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உடல் சென்னை சிறுசேரியில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விஸ்வேஷ்வர ராவ்
நடிகர் , இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஆளுமை விஸ்வேஷ்வர ராவ். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமானார். தனது 6 வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்ட விஸ்வேஷ்வர ராவ் இதுவரை 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த ' நான் ஏன் பிறந்தேன் , நீதிக்கு தலைவணங்கு, சிவாஜி கணேசன் நடித்த எங்கள் மாமா ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சினிமா தவிர்த்து மாமா மாப்பிள்ளை, தெய்வ மகள் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். விக்ரம் சூர்யா நடித்து பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் லைலாவுக்கு தந்தையாக , ஜீவா நடித்த ஈ படத்தில் சேட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூர்யா நடித்த உன்னை நினைத்து படத்தில் சார்லீக்கு இவருக்கும் இடையிலான நகைச்சுவை காட்சி இன்றும் ரசிகர்களால் மீம்களாக நினைவுகூறப்படும் காட்சி.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்றுவந்த விஸ்வேஷ்வர ராவ்இன்று ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை உடல் நலக் குறைவால் தனது 62 வயதில் காலமானார். அவரது உடல் சென்னை சிறுசேரியில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை நடைபெற இருக்கின்றன. சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சேஷு , மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஆகிய இருவரின் இழப்பைத் தொடர்ந்து தற்போது விஸ்வேஷ்வர ராவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது