Super Good Subramani Death: திரையுலகில் அதிர்ச்சி... புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்!
பிரபல நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் பாதிப்பட்டு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தமிழில் சுமார் 40-க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 58.
கடந்த சில மாதங்களாகவே, சூப்பர் குட் சுப்புரமணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவரின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தின் அடிப்படை செலவுக்காகவும் நடிகர், நடிகைகள், திரைப்பட சங்கங்கள் மற்றும் நண்பர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை ஒன்றை வைத்தார்.
இந்த நிலையில் தான், உடல்நிலை மோசமாக இருந்த போதும் கூட "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" என்ற படத்திற்கு தானாக முன்வந்து டப்பிங் பேசி கொடுத்தார். பிறகு, வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், மீண்டும் உடல் நிலை மோசமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு வந்த புற்றுநோய் அவரின் மூளை உட்பட உடல் முழுவதும் பரவியதால் அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணிக்கு மனைவி மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். தற்போது சூப்பர் குட் சுப்பிரமணியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளது. இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும். நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















