Chithha Unakku Thaan Song: அருவி போல் அன்ப தருவாளே! 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த சித்தா படப் பாடல்!
Chittha Song: இதுகுறித்து தன் இணைய பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நடிகர் சித்தார்த் பகிர்ந்துள்ளார்.
சித்தா படத்தின் உனக்கு தான் பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய நிலையில், நடிகர் சித்தார்த் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்கும் கதையை மையமாகக் கொண்டு சென்ற ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் சித்தா.
அருண் குமார் இந்தப் படத்தை இயக்கிய நிலையில், சித்தார்த் இந்தப் படத்தில் நடித்து தயாரித்திருந்தார். திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் பாடல்களுக்கு இணைந்து இசையமைத்திருந்தனர். விஷால் சந்திரசேகர் பின்னணி இசை அமைத்திருந்தார். நிமிஷா சஜயன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஹிட் அடித்த குழந்தை பாடல்
சித்தா படம் எவ்வளவுக்கெவ்வளவு பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியதோ, அவ்வளவுக்கு இப்படத்தில் இடம்பெற்ற “உனக்கு தான்” பாடலும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று, ரசிகர்களின் மத்தியில் லைக்ஸ் அள்ளியது. குழந்தைகளை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் வந்து ஹிட் அடித்த பாடல்களில், ஒரு சித்தப்பாவுக்கும், அண்ணன் மகளுக்கும் இடையேயான உறவுக்கு அழகு சேர்க்கும் வகையில் இந்தப் பாடல் அமைந்து ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் அள்ளியது.
பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் இப்பாடலின் வரிகளும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சந்தோஷ் நாராயணன், த்வனி கைலாஷ் இப்பாடலை இணைந்து பாடியுள்ளனர். சித்தா படம் வெளியானது முதல் ரீல்ஸ்கள், சமூக வலைதளம் என குழந்தைகளின் வீடியோக்களுடன் இப்பாடல் ஆக்கிரமித்து ரசிகர்களை உணர்வுப்பூர்வமாகக் கட்டிப்போட்டது. இந்நிலையில், யூடியூப் தளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்கள் அதாவது 5 கோடி பார்வையாளர்களை தற்போது இப்பாடல் கடந்துள்ளது.
சித்தார்த் நெகிழ்ச்சி
இதுகுறித்து தன் இணைய பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நடிகர் சித்தார்த் பகிர்ந்துள்ளார். “50 மில்லியன் மற்றும் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்” என சித்தார்த் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சந்தோஷ் நாராயணினின் இசை நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த் கலந்து கொண்டு இந்தப் பாடலை அவருடன் இணைந்து பாடிய வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் லைக்ஸ் அள்ளியது குறிப்பிடத்தக்கது.
Adding this song performance in Jaffna to our chennai playlist ❤️. Come watch us pour our hearts out for you on Feb 10 🤗. https://t.co/IqQFNkvRwe #NeeyeOli @MakingMomentsIN pic.twitter.com/mvclFFP1s4
— Santhosh Narayanan (@Music_Santhosh) December 24, 2023
இந்நிலையில் சித்தா திரைப்படம் சென்ற ஆண்டுக்கான தேசிய விருது வெல்லும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்து வருகிறது.
சித்தார்த்தின் திரைப் பயணம்
இந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் விரைவில் ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. நடிப்பு தாண்டி பின்னணி பாடகர், டப்பிங் தருவது, தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட நடிகராக வலம் வரும் சித்தார்த், சமீபத்தில் அயலான் படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார்.
மற்றொருபுறம் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் காதலில் இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் வெளிப்படையாக இதுகுறித்து பேசாவிட்டாலும் இணையத்தில், பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஒன்றாக போஸ் கொடுத்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றனர்