Bose Venkat: விஜய் நினைத்தால் இதை செய்யலாம்; அவருக்கு அந்த எண்ணமே இல்லை - போஸ் வெங்கட் ஓபன் டாக்
Bose Venkat : சிறிய பட்ஜெட் படங்களை பார்க்க ஆளே இல்லை. பெரிய பட்ஜெட் படங்களுக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி அங்கே நட்சத்திர நடிகராக பலர் ஜொலித்து வரும் வேளையில் ஒரு சிலர் குணச்சித்திர நடிகர்களாகவும் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான 'மெட்டி ஒலி' சீரியலின் மூலம் அறிமுகமானவர் போஸ் வெங்கட்.
சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த போஸ் வெங்கட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிய துவங்கின. அதன் மூலம் குணச்சித்திர நடிகராக, வில்லனாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் இருந்து வரும் போஸ் வெங்கட் தற்போது சின்னத்திரை சங்க தலைவராக இருக்கிறார்.
சாதி குறித்து படங்கள் :
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த போஸ் வெங்கட் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை குறித்து மிகவும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசி இருந்தார். தமிழ் சினிமாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சாதி குறித்த கதைகள் அளவுக்கு அதிகமாக திணிக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் சாதியை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் இது போன்ற கொடுமைகள் எல்லாம் நடந்தது என சொல்லி படம் எடுப்பார்கள். ஆனால் இன்றைய இயக்குநர்களான மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே எனக்கு இப்படி பட்ட கொடுமைகள் நடந்தது என அதை படமாகவே எடுக்க துவங்கிவிட்டார்கள்.
திணிக்கப்படும் மக்கள் :
இது போல வெளிப்படையாக சாதியை சுட்டிக்காட்டி படங்கள் தொடர்ந்து வெளிவருவதால் பெரிய அளவில் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என பலரும் பயத்தில் இருக்கிறார்கள். பெரிய நடிகர்களை வைத்து பெரிய முதலீட்டில் படம் எடுத்து விளம்பரம் என்ற பெயரில் போட்ட பணத்தை எல்லாம் எளிதாக எடுத்துவிடுகிறார்கள். ஒரு படத்தை ஆயிரங்கணக்கான திரையரங்கில் அனைத்து காட்சிகளிலும் திரையிட்டு மக்களை வேறு வழியில்லாமல் படத்தை பார்க்க வைக்கிறார்கள்.
சிறிய பட்ஜெட் அடிபடுகின்றன :
இது போன்ற போக்கால் தான் சிறிய பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. அந்த படத்தை பார்க்க ஆளே இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட் படங்களுக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள். தற்போது தமிழ் சினிமாவின் அவல நிலை இதுதான். தமிழ் சினிமாவில் மட்டுமே இது போன்ற போக்கு இருந்து வருகிறது.
மற்ற மொழி படங்கள்:
தெலுங்கு, மலையாள, கன்னட திரையுலகை சேர்ந்த டாப் ஸ்டார் நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சிறிய பட்ஜெட் படங்களையும் தயாரிக்கிறார்கள். அதே நேரம் பெரிய நடிகர்களும் சிறிய பட்ஜெட் படங்களை பார்க்க வேண்டும் என விளம்பரப்படுத்துகிறார்கள். அது போல ஒரு நிலை என் தமிழ் சினிமாவில் கடைபிடிக்கப்படவில்லை.
பெரிய நடிகர்களுக்கு கோரிக்கை :
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக இருக்கும் விஜய் நினைத்தால் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கலாம். அதன் மூலம் வளர்ந்து வரும் நடிகர்கள், இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால் அவருக்கு ஏன் அந்த எண்ணமே இல்லை. இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார். மிக பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தான் தமிழ் சினிமா அழிவதற்கு காரணமாக இருக்க போகிறார்கள். இதில் இருந்து எப்படியாவது தமிழ் சினிமா இனிமேலாவது மீள வேண்டும் என மிகவும் வெளிப்படையாக தன்னுடைய கருத்துக்களை முன்வைத்து இருந்தார் போஸ் வெங்கட்.