Avatar Beats Marvel: ‘மார்வல்’ படத்தை தட்டித்தூக்கிய ‘அவதார்’; ரிலீஸிற்கு முன்னரே கொட்டும் கோடிகள்!
Avatar Beats Marvel: டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸாகவுள்ள அவதார் படம், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனில் டாக்டர் ஸ்ட்ரேன்ஞ் படத்தை, டிக்கெட் புக்கிங்கில் முந்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக ஹாலிவுட் ரசிகர்களே அதிகமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம், அவதார் படத்தின் இரண்டாம் பாகம். 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் பலர் 13 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். 2009ஆம் ஆண்டு வெளியாகியிருந்த 'அவதார்' படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது.
ட்விட்டரில் பாசிடிவ் விமர்சனம்:
இரண்டு நாட்களுக்கு முன்னர், அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் லண்டனில் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த பத்திரிகைளார்கள், படம் நன்றாக இருக்கிறது எனவும், ஜேம்ஸ் கேமரூன் மீண்டும் ஜெயித்து விட்டதாகவும் ட்விட்டரில் பாசிடிவ் விமர்சனங்களாக எழுதி வந்தனர்.
அதில் பெரும்பாலானோர், “அவதார் படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. கதை சொன்ன விதம், படத்தை எடுத்த விதம் அனைத்திலும் ஜேம்ஸ் கேமரூன் ஜெயித்திருக்கிறார். மக்கள் அனைவரும் கண்டிப்பாக அவதார் படத்தை விரும்புவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இன்னும் சிலரோ, அவதார் திரைப்படத்தில் எமோஷனல், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாகவும், கண்டிப்பாக இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என்றும் தெரிவித்தனர். இதனால், அவதார்-2 படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக கூடியது. இந்த நிலையில் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மார்வல் படத்தை முந்திய அவதார்!
அவதார் படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், இப்படம் இந்தியாவில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. ரிலீஸிற்கு முன்னரே, இப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனில் சக்கை போடு போட்டு வருகிறது. அவதார் படம், இந்தியாவில் ரிலீஸிற்கு 10 நாட்களுக்கு முன்னரே, டிக்கெட் முன்பதிவில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.
இதற்கு முன்னர், மார்வல் படமான டாக்டர் ‘ஸ்ட்ரேன்ஞ் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படமே இந்த சாதனையை இந்தியாவில் படைத்திருந்தது. அது மட்டுமன்றி, அவதாரின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிளேயே 4 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
டிசம்பர் 16-ல் அவதார்-2:
டைட்டானிக்கின் Highest Grossing Film (மிக அதிக வசூல் செய்த திரைப்படம்) எனும் ரெக்கார்டை ப்ரேக் செய்த அவதார் திரைப்படம், ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தது. 3டி வடிவில் உருவான இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வேற்று கிரகத்தில் வாழும் நாவி இன மக்களின் வளங்களை திருடும் மனிதர்கள், அதற்கு எதிராக போராடும் நாவி மக்கள், இவர்களுக்கு துணையாக நிற்கும் ‘ஹைப்ரிட்’ அவதாரான ஹீரோ, இவர்களைச் சுற்றி சுழலும் சயின்ஸ் பிக்ஷன் கதைதான் அவதார்.
இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. முதல் பாகத்தில் தங்களின் இனத்தையும் இருப்பிடத்தையும் காப்பதற்காக மனிதர்களை எதிர்த்து பாண்டோரா இன மக்கள் ஆரம்பித்த போராட்டம், இந்த பாகத்திலும் தொடர்கிறது. இதில், கூடுதலாக தோன்றியுள்ள அவதார் குட்டிகளும் நீரில் சண்டையிடும் காட்சிகளும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.