Atlee Priya Baby: ”எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு” .. மகிழ்ச்சியில் அட்லீ - ப்ரியா ஜோடி.. குவியும் வாழ்த்துகள்..
அட்லீ தனது நீண்டநாள் நெருங்கிய தோழியான பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இயக்குநர் அட்லீ - நடிகை பிரியா தம்பதியினர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர்.
நடிகை பிரியாவுடன் திருமணம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள அட்லீ தனது நீண்டநாள் நெருங்கிய தோழியான பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். சீரியல்கள், குறும்படங்கள் மற்றும் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் பிரியா நடித்திருக்கிறார்.குறிப்பாக, சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக துணை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். திருமணமான சமயத்தில் தம்பதியினரின் நிறம் குறித்து சர்ச்சையான பல கருத்துகளை இணையவாசிகள் தெரிவித்தனர். ஆனால் அனைத்தையும் விட அன்பு தான் உயர்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
விமரிசையாக நடந்த வளைகாப்பு
கடந்தாண்டு நவம்பர் மாதம் அட்லீ ப்ரியா தம்பதி, தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில், “தாங்கள் பெற்றோராக போகும்” செய்தியை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர். அந்த பதிவில், “எங்களது குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் ! நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம். இந்த அழகான பயணம் முழுக்க உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும். அன்புடன் அட்லீ, பிரியா மற்றும் பெக்கி'', என தங்களது செல்ல நாய்க்குட்டியுடன் அட்லீ பிரியா தம்பதி இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
இதனையடுத்து கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி பிரியாவின் வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் முதல் ஆளாக கலந்து கொண்டார். இது விஜய் - அட்லீ இடையேயான அன்பை காட்டுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து அந்த புகைப்படங்களை பகிர்ந்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அட்லீ - பிரியா தம்பதியினர் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்,” இந்த மாதிரி ஒரு உணர்வு உலகில் எங்கும் இல்லை.. பெற்றோராக புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அட்லீயின் பயணம்
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த இளம் இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மணிரத்னம் இயக்கிய ‘மௌனராகம்’ படத்தின் காப்பி என சொல்லப்பட்டாலும் இளைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதைத்தொடர்ந்து முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இயக்கிய 4 படங்களுக்கு சூப்பரான வெற்றியை பெற்றதால் முன்னணி இயக்குநராக உயர்ந்த அட்லீ, தற்போது இந்தியில் ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.