Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடத்திய சோதனைக்காக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் அமலாக்கத் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது

டாஸ்மாக் ஊழல் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கைகளுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை மீறி ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதால் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத் துறையினர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஆகாஷ் பாஸ்கரனிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். அமலாக்கத் துறையினர் மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது
நீதிமன்ற உத்தரவை மீறிய அமலாக்கத்துறை
டாஸ்மாக் நிர்வாகத்தில் சுமார் 1000 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் தூறை சோதனை நடத்தியது. இந்த அலுவலகத்தில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு மற்றும் அலுவலத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களை டான் பிக்ச்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார் ஆகாஷ் பாஸ்கரன் . போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறும் விதமாக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அமலாக்கத் துறையினரை கண்டித்ததோடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய ஆகாஷ் பாஸ்கரனுக்கு அனுமதி வழங்கியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு
அமலாக்கத் துறை உதவி இயக்குநர் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பளிக்கும் அதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகளை ஆஜராக முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இப்படியான நிலையில் இன்று அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் நேரடியாக ஆஜராகி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார். ஆஜராகாத மற்ற அதிகாரிகளை டிசம்பர் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தவிடப்பட்டுள்ளது.





















