Demonte Colony 2: போஸ்டரில் மிரளச்செய்யும் டிமான்டி காலனி 2 - இணையத்தில் வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்
கல்லறையில் இருந்தபடி கையில் 'டிமான்ட்டி காலனி 2' டாலரை வைத்திருக்கும் அருள்நிதி போஸ்டரிலேயே மிரள வைத்துள்ளார்
Demonte Colony 2: அருள்நிதி நடிக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பேய் கதைகள் எல்லாம் காமெடி படமாக மாறி போன நிலையில், பார்ப்போரை வியர்க்க வைத்த ஒரு த்ரில்லர் படம் தான் டிமான்ட்டி காலனி. 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெள்ளைக்காரன் காலத்து ஃப்ளாஷ்பேக் கொண்டு, ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நண்பர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படும் காட்சிகள், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது.
படத்தின் இறுதியில் யாரும் தப்பிக்க முடியாத என்பதற்கு ஏற்ப ஹீரோவாக நடித்து இருந்த அருள்நிதியும் இறந்து இருப்பார். டிமான்ட்டி காலனி படம் வெளியானதை தொடர்ந்து அது போல் ஒரு வீடு சென்னையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அங்கு செல்ல வேண்டும் என பலர் ஆர்வம் காட்டினர். ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத பங்களா தான் டிமான்டி காலனி படத்தில் காட்டப்பட்ட வீடு என்றும், அங்கு பேய்கள் நடமாடுவதாகவும் வதந்திகள் பரவின. இதனால் அந்த பகுதிக்கு சிலர் சென்று புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
இந்த அளவுக்கு திகிலை கிளக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு கூறியுள்ளது. முதல் பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் இரண்டாம் பாகத்தில் இருக்கும் என படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். படத்தின் கதைக்கு ஏற்ப சிறப்பான VFX காட்சிகளுடன் டிமான்டி காலனி2 படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
டிமான்டி காலனி2 படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி. எஸ். இசை அமைத்துள்ளா. ஹாரர் திரில்லர் ஜானரில் உருவான இந்த படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை சார்பில் தயாரிக்கப்படுகிறது. சென்னை, ஓசூர், ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதி கட்டப் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
'டிமான்ட்டி காலனி 2' படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கல்லறையில் இருந்தபடி கையில் 'டிமான்ட்டி காலனி 2' டாலரை வைத்திருக்கும் அருள்நிதி போஸ்டரிலேயே மிரள வைத்துள்ளார். இந்த பாகத்திலும் முதல் பாகத்தை போன்ற த்ரில்லிங் சீன்ஸ்க்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.