Box Office Collection: கவின், சந்தானம், சுந்தர் சி.. சம்மர் பாக்ஸ் ஆஃபிஸ் ரேஸில் முந்துவது யார்? வசூல் நிலவரம்!
Box Office: மே மாதம் வெளியாகிய அரண்மனை 4 , கவின் நடித்த ஸ்டார் மற்றும் சந்தானம் நடித்து வெளியான ‘இங்க நான் தான் கிங்கு’ ஆகிய மூன்று படங்களின் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்.
மே மாதம் வெளியான படங்கள்
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ கடந்த மே 3ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இதனைத் தொடர்ந்து கவின் நடித்த ஸ்டார் படம் மே 10ஆம் தேதி வெளியானது. தற்போது சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ படம் கடந்த மே 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. மூன்று படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மூன்று படங்களின் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்.
அரண்மனை 4
வெற்றிகரமான 3 பாகங்களுக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் அரண்மனை 4. ராஷி கண்ணா, தமன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விடிவி கணேஷ், யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த மே 3 ஆம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்ப்புகளை மீறி பெரிய அளவில் வசூலை ஈட்டியுள்ளது. படம் வெளியாகி 15 நாட்கள் கடந்துள்ள நிலையில், ‘அரண்மனை 4’ உலகளவில் ரூ.70 கோடிகள் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்டார்
இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் (Star Movie) படம் கடந்த மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் எனப் பலரும் நடித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது சந்திக்கும் விபத்து அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது ? அந்த விபத்தில் இருந்து மீண்டு அவன் சினிமாவில் நடிகனாக , ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே படத்தின் கதை. முதல் மூன்று நாட்களில் ஸ்டார் படம் ரூ.15 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. படத்தின் வசூல் நிலவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், ஸ்டார் படம் முதல் 7 நாட்களில் ரூ.18 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்க நான் தான் கிங்கு
‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் கடந்த மே 17ஆம் தேதி வெளியாகியுள்ள படம் 'இங்க நான் தான் கிங்கு' (Inga Naan Thaan Kingu) . இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மறைந்த மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ், மறைந்த நடிகர் சேஷூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.1 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி வெளியான ஸ்டார் படம் முதல் நாளில் 3.25 கோடி வசூல் செய்திருந்த நிலையில் சந்தானத்தின் படம் கவினின் படத்தைக் காட்டிலும் குறைவான வசூலையே ஈட்டியுள்ளது. ஆனால் சம்மர் விடுமுறையில் காமெடி படமான இப்படம் கல்லாகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.