AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? - அவரே பகிர்ந்த தகவல்!
நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சென்னையில் தான் கழித்தேன். நான் சென்னையில் தான் பிறந்தேன். என்னுடைய தந்தை ஸ்டூடியோக்களில் வேலை செய்து வந்தார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தான் சிறுவயதில் பட்ட துன்பத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நேர்காணலில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ நான் சிறு வயதாக இருக்கும்போது தினமும் பல அதிர்ச்சிகளை மட்டுமே அனுபவித்தேன். நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காக என்னுடைய அப்பா 3 வேலைகள் செய்துள்ளார் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சென்னையில் தான் கழித்தேன். நான் சென்னையில் தான் பிறந்தேன். என்னுடைய தந்தை ஸ்டூடியோக்களில் வேலை செய்து வந்தார். நாங்கள் கோடம்பாக்கத்திற்கு அருகில் தான் வசித்து வந்தோம். அங்குதான் எல்லா ஸ்டுடியோக்களும் இருந்தன.
என் தந்தையையும் தாயையும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெருவில் தள்ளி விட்டனர். பின்னர் நாங்கள் ஒரு வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினோம். எங்களுக்கு அந்த வீட்டை சொந்தமாக வாங்கித் தர என்னுடைய அப்பா இரவும் பகலும் உழைத்தார். ஒரே நேரத்தில் மூன்று வேலைகளைச் செய்தார், அதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதுதான் என் குழந்தைப் பருவத்தின் இருண்ட பக்கம், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள நிறைய நேரம் பிடித்தது என கூறியுள்ளார்.
என் அம்மா வலிமையானவர்
தொடர்ந்து மறைந்த தனது தாயைப் பற்றி பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “நான் வளர்ந்து கொண்டிருந்தபோது, என் தந்தை மற்றும் பாட்டியின் மரணம் போன்ற பல எதிர்பாராத விஷயங்களை சந்தித்தேன். இவை நடந்தபோது எனக்கு ஒன்பது வயதுதான் ஆகியிருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் நான் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியைக் கண்டேன். என் அம்மா ஒரு ஒற்றைத் தாயாக இருந்தாலும் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்மணியாக இருந்தார். அவர் எல்லா வலிகளையும் ஏற்றுக்கொண்டார். எங்களைப் பாதுகாக்க அவர் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எல்லா வகையான அவமானங்களையும் தாங்கி, தனியாக எங்களை வளர்த்த ஒரு வலிமையான பெண் அவர்” என தெரிவித்தார்.
மேலும் தான் இசையைத் தொடர ஊக்குவித்தவர் தனது தாயார் தான். எனக்கு ஒன்பது வயதாக் இருக்கும்போது தந்தை இறந்த பிறகு, குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். என் வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை 40 மற்றும் 50 வயதுடைய இசைக்கலைஞர்களுடன் ஸ்டுடியோக்களில் கழித்தேன். அப்போதெல்லாம் பள்ளி வாழ்க்கையை அனுபவிக்கவோ அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிடவோ தனக்கு மிகக் குறைந்த நேரமே இருந்ததாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்து கொண்டார்.
அப்படிப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து இந்திய சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்தார். திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகளை வென்றார். அவர் பெறாத விருதுகள் கிடையாது. பல மொழிகளில் இசையமைத்துள்ள அவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















