AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானுவிற்கு விவாகரத்து பெற்றுத் தந்த வந்தனா ஷா இந்தியாவின் புகழ்பெற்ற விவாகரத்து வழக்கறிஞர் ஆவார்.
தமிழ் திரையுலகின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் – அவரது மனைவி சாய்ரா பானு தம்பதி இந்திய திரையுலகின் ரசிகர்களால் கொண்டாடப்படும் தம்பதிகளில் ஒருவர் ஆவார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து:
ஆனால், நேற்று ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சி அடையும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ராபானு இருவரும் பிரிவதாக பிரபல வழக்கறிஞர் வந்தனா ஷா அறிவித்துள்ளார். இவர்களது இருவரது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட வழக்கறிஞர் வந்தனா ஷா பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்ட வந்தனா ஷா இந்தியாவின் புகழ்பெற்ற விவாகரத்து வழக்கறிஞர் ஆவார். இவர் மும்பை மற்றும் புனேவில் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். இந்தியாவின் பிரபலமான அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்களுக்கு விவகாரத்து பெற்றுத் தந்தவர் வந்தனா ஷா.
சொந்த வாழ்வில் நிகழ்ந்த சோகம்:
வந்தனா ஷா ஒரு விவகாரத்து வழக்கறிஞராக உயர்ந்ததற்கு அவரது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வு முக்கியமான காரணம் ஆகும். இவருக்கு திருமணமான புதியதில் இவருக்கும், இவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடால் சண்டை நிகழ்ந்துள்ளது. வந்தனா ஷாவிற்கு 28 வயதாக இருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் அவரது கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
அப்போது கையில் தன்னுடைய உடைகள் மற்றும் 750 ரூபாய் காசு மட்டுமே அவரிடம் இருந்துள்ளது. அந்த துயர சம்பவம் அவரது வாழ்க்கையை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. அதன்பின்பு, வந்தனா ஷா 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
விவாகரத்துக்கு தனி செயலி:
வழக்கறிஞரான அவர் தன்னுடைய சொந்த வாழ்வில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு இதுபோன்று கணவன்களாலும், கணவன் குடும்பத்தினரால் துன்பப்படும் பெண்களுக்கு விவாகரத்து வாங்கித் தரத் தொடங்கியுள்ளார். இதற்காக விவாகரத்து ஆதரவுக்குழு ஒன்று அமைத்துள்ளார்.
விவகாரத்து தொடர்பாக 360 டிகிரி பேக் டூ லைஃப் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். விவகாரத்து தொடர்பாக சட்ட ஆலோசனைகள் பெறுவதற்காக இந்தியா மட்டுமின்றி உலகிலேயே முதன்முறையாக செயலியைத் தொடங்கிய பெருமையும் வந்தனா ஷாவிற்கு சேரும். விவாகரத்து தொடர்பான சட்ட ஆலோசனைகளை பெறுவதற்காக டைவர்ஸ்கார்ட் என்ற செயலியை தொடங்கியுள்ளார். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வடிவமைத்துள்ளார். இந்த செயலியை விரைவில் உலகம் முழுவதும் செயல்படுத்தவும் வந்தனா ஷா முடிவு செய்துள்ளார்.
வழக்கறிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், தொழில் முனைவோர் என பன்முகம் கொண்டவராக திகழ்கிறார். இவரைப் பற்றி பிபிசி ஒரு ஆவணப்படமும் உருவாக்கியுள்ளது.