சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பரப்புரையில் களமிறங்க உள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் தேர்தலாக மாறியிருப்பது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகின் வல்லரசு நாடாக உலா வரும் அமெரிக்காவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் உலக பொருளாதாரத்தையே மாற்றும் வல்லமை கொண்டதால் அந்த நாட்டு அதிபராக யார் தேர்வு செய்யப்பட போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இதற்காக இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் இருவரின் வெற்றியைத் தீர்மானிப்பதிலும் இந்தியர்களின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களை கவரும் விதத்திலும் இருவரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். முதல் கருப்பின பெண், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது கமலா ஹாரிசுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
கமலா ஹாரிசுக்காக களமிறங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்:
இந்த சூழலில், கமலா ஹாரிசுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவருக்கு ஆதரவாக இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கர் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் பரப்புரையில் களமிறங்க உள்ளார். அவர் தன்னுடைய இசை மூலமாக கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பரப்பரையில் ஈடுபட உள்ளார்.
ANNOUNCING: A. R. RAHMAN Virtual Concert WORLD PREMIERE on SUNDAY 10/13 at 8 PM ET! Save your spot to see @arrahman perform classic favorites, recorded exclusively for this celebration in support of Kamala Harris: https://t.co/kWaT3X6iID#ARRahman #ARR pic.twitter.com/hON70umlqp
— AAPI Victory Fund (@AAPIVictoryFund) October 11, 2024
நாளை இரவு 8 மணிக்கு இணையவழி மூலமாக நடத்தப்படும் 30 நிமிட இசை நிகழ்ச்சி மூலமாக இந்த கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பரப்புரையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட உள்ளார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள ஏஏபிஐ விக்டரி பண்ட் தலைவர் சேகர் நரசிம்மன் கூறியிருப்பதாவது, இதன் மூலமாக அமெரிக்காவில் முன்னேற்றம் மற்றும் பிரதிநிதித்துவத்திற்காக நிற்கும் தலைவர்கள் மற்றும் கலைஞர்களின் குழுவின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குரலை சேர்த்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதற்கான சிறப்பு வீடியோ ஒன்றையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சரிசம பலம்:
உலகம் முழுவதும் பிரபலமான இசையமைப்பாளரும் ஆசிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ்பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது ஜனநாயக கட்சியினருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்த முறையும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அவருக்கான ஆதரவை மேலும் அதிகரித்துள்ளது.
கமலா ஹாரிசுக்கும், ட்ரம்பிற்கும் சரிசம ஆதரவு இருப்பதால் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் அதிபரான முதல் பெண் என்ற பெருமையையும், அமெரிக்காவின் அதிபரான முதல் கருப்பின பெண் என்ற பெருமையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.