18 Years Of Gajini: சஞ்சய் ராமசாமியாக கலக்கிய சூர்யா..உச்சத்துக்கு சென்ற ஏ.ஆர்.முருகதாஸ்.. கஜினி படம் ரிலீசாகி 18 வருஷமாச்சு..!
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி சூர்யா,அசின், நயன்தாரா நடித்து வெளியான கஜினி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றன
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி சூர்யா,அசின், நயன்தாரா நடித்து வெளியான கஜினி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
எப்படி சஞ்சய் ராமசாமி சில விஷயங்களை மறந்துவிடுவாரோ அப்படி நாமும் சில விஷயங்களை மறந்துவிட்டு கஜினி படத்தைப் பற்றி பேசலாம். முதலில் நாம் மறக்க வேண்டியது பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய மொமெண்டோ என்கிற படத்தின் அச்சு காப்பியடிக்கப் பட்ட படம் கஜின் என்பதை...
இரண்டாவதாக இந்த உண்மையை எந்த இடத்திலும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் சொல்லாமல் இன்றுவரை தனதல்லாத ஒரு கதைக்கு பாராட்டுக்களைப் பெற்று வருகிறார் என்பதையும் நாம் மறந்துவிடலாம். இப்போது படத்திற்குள் போகலாம்.
கஜினி
சூரியா, அசின் , நயன்தாரா, மனோபாலா, உள்ளிட்டவர்கள் நடித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படத்தில் இருந்து சுடப்பட்ட கதையாக இருந்தாலும் கஜினி படத்தின் சிறப்பம்சம் உணர்ச்சிகரமான ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டதே. மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான சஞ்சய் கல்பனா என்கிற ஒரு சாதாரண (நமக்குத்தான் அவர் அசின்) பெண்ணின் மீது ஈர்க்கப்படுவது அவரது குணத்திற்காகவே.
தொடக்கத்தில் இருந்து பிறருக்கும் உதவ நினைக்கும் கல்பனா கடைசியில் தான் செய்த உதவிக்காகவே கொலை செய்யப்படுகிறார் என்பது ஒரு கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கு முழுமை சேர்ப்பதாக இருந்தது. இறுக்கமான தமது அன்றாட வாழ்க்கையில் சலிப்படைந்துபோன சஞ்சய் சின்ன சின்ன விஷயங்களில் இருந்து மகிழ்ச்சியை எடுத்துக்கொள்வது அவருக்கு பிடித்திருக்கிறது. மூன்று கார் வாங்கிய பின் தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்கிற கல்பனாவின் கொள்கை கடைசிவரை சஞ்சய் யார் என்கிற உண்மையை தெரிந்துகொள்ளாமலே போய்விடுகிறது. இன்றுவரை ரசிகர்களின் மனதில் இன்று வரை நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது.
தொடக்கத்தில் மொட்டையடித்து கொலை செய்யும் ஒரு கதாநாயகனை நாம் பார்த்து பயப்படுகிறோம். ஆனால் சூர்யாவின் அழகான முகத்தோடு தொடங்கும் அவரது பிளாஷ்பேக் காட்சி, கல்பனாவுடனான காதல், சொல்லப்படாமல்போன தன்னைப் பற்றிய உண்மை என உணர்வுப்பூர்வமாக பட இடங்களை படத்தில் சேர்த்திருப்பார் முருகதாஸ். தமிழ் சினிமாவில் இன்னும் சில வருடங்கள் நின்று ஆடியிருக்க வேண்டியவர் அசின் என்பது இந்த மாதிரியானப் படங்களைப் பார்க்கும்போது லைட்டாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் அது அவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதை பெருந்தன்மையாக சொல்லிக் கொண்டுதான் அசின் ரசிகர்கள் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள்.