Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்க வைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் சுவாரஸ்ய தகவல்கள்!
Thiruvarutchelvar : ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசனின் அட்டகாசமான நடிப்பில் வெளியான 'திருவருட்செல்வர்' திரைப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக ஆன்மிக மணம்மிக்கதாக மாற்றியதில் பெரும் பங்காற்றியவர் ஏ.பி.நாகராஜன். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை என பக்தி படங்களாக இயக்கி வந்த அவர் 1967ம் ஆண்டு நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக 'திருவருட்செல்வர்' என்ற படத்தை இயக்கினார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, முத்துராமன், பத்மினி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோரமா, வி.நாகைய்யா, குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுத கே.வி.மகாதேவன் இசையமைத்து இருந்தார். இப்படம் வெளியாகி 57 ஆகிவிட்ட நிலையில் இன்றும் பார்த்தால் ஆச்சரியத்தையே ஏற்படுத்தும்.
* நடிகர் சிவாஜி கணேசன் இப்படத்தில் அப்பர், சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார், திருக்குறிப்பு தொண்ட நாயனார் என நான்கு நாயன்மார்களின் வேடத்தில் நடித்திருந்தார்.
* இப்படத்தில் நடிக்கும் போது நடிகர் சிவாஜி கணேசனின் வயது 39 தான் என்றாலும் 80 வயது முதியவராக அப்பூதியடிகள் நாயகராக மிக சிறப்பாக நடித்திருந்தார். முகமெல்லாம் சுருக்கம், நடை, உடை, பாவனை, தள்ளாட்டம், கண்ணசைவு, குரல் என அத்தனை நுணுக்கமான அசைவுகளையும், மேனரிசத்தையும் பயன்படுத்தி இருப்பார்.
* 80 வயது கிழவராக நடித்தும் இப்படத்தை 100 நாட்கள் வரை ஓட வைத்து வெற்றிப்படமாக்க நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியம்.
* ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1967ம் ஆண்டு ‘கந்தன் கருணை’ மற்றும் ‘திருவருட்செல்வர்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டுமே மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த இரு கலர் படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
* கே.வி. மகாதேவன் இசையில் இப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் அதில் 7 பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடி இருந்தார்.
* பி. சுசீலா இரு பாடல்களை பாடியுள்ளார். அதிலும் மன்னவன் வந்தானடி... பாடல் இன்று வரை மிகவும் பிரபலமான ஒரு பாடலாக நெஞ்சில் நிலையுள்ளது. பாடல் ரெக்கார்டிங் சமயத்தில் நடிகர் சிவாஜி வந்து பி. சுசீலா அருகில் வந்து உட்கார பாட முடியாமல் திணறிய சுசீலா பல டேக்குகள் வாங்கினார். பின்னர் இயக்குநர் மூலம் விஷயம் என்ன என்பதை தெரிவித்து சிவாஜி கிளம்பியதும் ஒரே டேக்கில் ஒகே செய்தாராம் சுசீலா. * இந்த நாட்டிய பாடலை காட்சி படுத்த கிட்டத்தட்ட 5 நாட்கள் எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
* நடிகை ஸ்ரீவித்யா இந்த படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 14.
* காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி ஒரு முறை வழிநெடுக இருந்த போஸ்டரை உற்று பார்த்துள்ளார். அவருக்கு கண் பார்வை மங்கலாக இருந்ததால் அருகில் இருந்தவர்கள் அது நீங்கள் இல்லை ஐயா, சிவாஜி கணேசன் நடித்த 'திருவருட்செல்வர்' படத்தின் போஸ்டர் என விளக்கம் கொடுத்துள்ளனர்.
*ஒரு முறை காஞ்சி மடாதிபதியை சந்திக்க சிவாஜி நேரில் சென்ற போது அவர் புருவத்துக்கு மேல் கை வைத்து சிவாஜியை பார்த்துள்ளார். அந்த நுணுக்கத்தை கூட சிவாஜி கணேசன் இப்படத்தில் பயன்படுத்தி இருப்பார். இதை அவரே ஒரு முறை தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.