Jailer Mohanlal: ஒவ்வொரு நடிகருக்கு ஒரு பிஜிஎம்... ஜெயிலர் படத்தில் மோகன்லாலுக்கு அனிருத் கொடுத்திருக்கும் மாஸ் பிஜிஎம்!
பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிஜிஎம் கொடுத்திருக்கிறாராம் அனிருத். மோகன்லால் ஸ்பெஷல் ஒன்றும் இதில் அடக்கம்!
ஜெயிலர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக அனிருத இசையமைத்திருக்கும் ‘ஹுக்கும்’, ‘ஜுஜுபி’ மற்றும் முத்துவேல் பாண்டியனின் பிஜிஎம் எல்லாம் பயங்கர மாஸாக வந்திருக்கின்றன. ஆனால் மாஸான ஒரு இசையை ரஜினிக்கு மட்டுமில்லை மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுக்கும் கொடுத்திருக்கிறாராம் அனிருத்.
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், விநாயகன், யோகிபாபு, ஷிவ ராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது
வெறித்தனமான ட்ரெய்லர்
ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரஜினி ரசிகர்களை கொண்டாட்டத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும், அமைதியாக இருந்து ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஹீரோ, ரஜினிகாந்துக்கென ஃப்ளாஷ்பேக் காட்சி என பாட்ஷா படத்தை நினைவுபடுத்துவது போல் இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்த நிலையில், தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் ட்ரெய்லர் லைக்ஸ் அள்ளி வருகிறது.
தமன்னா எங்கடா
ஆனால் இந்த ட்ரெய்லரில் தமன்னா இடம்பெறாதது, கன்னட மற்றும் மலையாளத் திரைப்பட ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்த சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்டோரின் காட்சிகள் இடம்பெறாமல் போனது ஆகிய காரணங்களால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர்.
சமாதானம் கொடுத்த அனிருத்
மோகன்லால் ரசிகர்களை சமாதானம் செய்யும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலின் படி மோகன் லாலுக்கு படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. படத்தில் முத்துவேல் பாண்டியனாக நடித்திருக்கும் ரஜினிகாந்துக்கு உதவும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக மோகன்லால் இருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அனிருத் கொடுத்திருக்கும் மாஸான பின்னணி இசை
பொதுவாகவே ஹீரோக்கு மட்டுமில்லாமல் வில்லன்களுக்கும் சிறப்பான பின்னணி இசையைக் கொடுப்பவர் அனிருத். கத்திப் படத்தின் வில்லனுக்கு வரும் புல்லாங்குழல் இசை, மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வரும் இசை, விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி , ஃபகத் ஃபாசில், சூர்யா என ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பின்னணி இசையைக் அமைத்திருப்பார்.
அதே போல் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு பின்னணி இசையை அமைத்திருக்கிறார் அனி. குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்காக மிக சிரத்தை எடுத்து ஒரு பிஜிஎம் அமைத்திருக்கிறாராம் . இந்தத் தகவல் ஜெயிலர் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது!