Anand Babu: என்னோட பொழப்பே மாறிப்போச்சு... டாக்டராக வேண்டியவன் நான்... மனம் திறந்த ஆனந்த் பாபு
Anand babu : எனக்கு நடிகனாக வேண்டும் என்ற விருப்பம் கிடையாது நடிக்கவும் தெரியாது. அதே போல டான்ஸ் என்பதும் எனக்கு தெரியாத ஒன்றுதான்..
காலங்களை கடந்த மகா கலைஞன் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு 80ஸ் காலகட்டத்தில் ஒரு பிரபலமான நடிகராக திகழ்ந்தவர். நடிகர் பிரபுதேவாவுக்கு முன்னர் தமிழ் சினிமாவை தனது நடனத்தால் ஆட்டிப்படைத்தவர் அவர்தான். சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகர் ஆனந்த் பாபு தற்போது சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆனந்த் பாபு திரையுலகிற்குள் வந்த கதை குறித்து அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.
”நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். எனக்கு நடிகனாக வேண்டும் என்ற விருப்பம் கிடையாது.. நடிக்கவும் தெரியாது. அதே போல டான்ஸ் என்பதும் எனக்கு தெரியாத ஒன்றுதான்.. அப்படி இருக்கையில் நான் நடிகனானது ஒரு சவாலாகத்தான் இருந்தது. அடிப்படையில் நான் ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சன். பியானோ மட்டும் வாசிப்பேன். அப்போது காலேஜ் கலை விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அப்பாவோட டான்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு ரூமுக்குள் போய் இங்கிலீஷ் பாட்டு போட்டு ப்ராக்டீஸ் பண்ணி பார்த்தேன். கொஞ்ச நேரம் ப்ராக்டிஸ் பண்ணி பார்த்த பிறகு அப்பா அம்மாக்கு முன்னாடி ஆடி காட்டினேன். அதை பார்த்துட்டு அப்பா அம்மா இரண்டு பேருமே எதுவும் சொல்லவில்லை. அப்பா கிளம்பி ஷூட்டிங் போயிட்டார். எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு..
அப்போதான் முதல் முறையா மேடையில் ஆட போகிறேன். அப்பா தான் தலைமை விருந்தினர். அவருக்கு முன்னாடி நான் ஆட போகிறேன். முதல் பரிசும் கிடைத்தது. அது நாளிதழ்களில் எல்லாம் வந்தது. அதை பார்த்து பல தயாரிப்பாளர்கள் அப்பாவிடம் என்னை நடிக்க சொல்லி கேட்டுக்கொண்டுள்ளனர். இது எதையுமே, என்னிடம் வந்து அப்பா சொன்னதே கிடையாது.
அடுத்த ஒரு மாதத்தில் நான் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும். தயாரிப்பாளர்கள் அப்பாவை தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஒரு படம் மட்டும் செய்ய சொல்லி வற்புறுத்தினார்கள். அதிலேயும் அப்பாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் வந்து மிகவும் உரிமையோடு, ”இது ஒரே ஒரு படம் மட்டும் பண்ணி கொடுத்துட்டு போடா ராஜா..” என சொன்னதால் அப்பாவால் மறுக்க முடியவில்லை. அதனால் ஒரு படத்தில் நடித்தேன், அது சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அத்தோடு சேர்த்து என்னுடைய வாழ்க்கையையும் மாற்றிவிட்டது. என்னோட தொழில், பிழைப்பு எல்லாம் மாறிப்போய் இப்போ உங்க முன்னாடி நடிகனா வந்து நிக்குறேன்" என பேசி இருந்தார் நடிகர் ஆனந்த் பாபு.