Amaran: இந்தியிலும் மாஸ் காட்டிய SK! அஜய் தேவ்கன் படத்தையே ஆட்டம் காண வைத்த அமரன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் இந்தியிலும் வெளியாகி பாலிவுட் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடப்பாண்டிற்கான தீபாவளி வெளியீடாக திரையரங்கிற்கு வந்த படம் அமரன். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வசூலில் அசத்தும் அமரன்:
ராணுவ வீரரின் உண்மையான வரலாறு, சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் தயாரிப்பு என மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம், வலுவான மற்றும் உணர்ச்சிகரமான திரைக்கதையால் ஹவுஸ்புல் காட்சிகளாக படத்தை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.
தீபாவளி வெளியீடாக தமிழில் வெளியான ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பெக்கர் படங்களை காட்டிலும் அமரன் படத்திற்கே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அமரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது. பிற மொழிகளிலும் அமரன் படத்திற்கு தொடர்ந்து அமோக வரவேற்பு கிட்டி வருகிறது. குறிப்பாக, இந்தியிலும் அமரன் படம் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.
பாலிவுட் படங்களுக்கே சவால்:
இந்தியில் தீபாவளி கொண்டாட்டமாக அஜய் தேவ்கனின் சிங்கம் அகெய்ன், கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன் நடித்த பூல் பூலையா 3 ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரு படங்களின் முந்தைய பாகங்களும் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் ஆகும். இந்த நிலையில், இந்த இரு படங்களும் இந்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியது. இரு படங்களும் இந்தியில் 100 கோடிக்கு மேல் தற்போது வரை வசூலை குவித்துள்ளது. குறிப்பாக, சிங்கம் அகெய்ன் படம் பாலிவுட் உச்சநட்சத்திரம் அஜய் தேவ்கனின் படம் ஆகும். அந்த படத்தில் அவருடன் கரினா கபூர் நடித்துள்ளார். தீபிகா படுகோன், அக்ஷய்குமார், ரன்வீர்சிங், டைகர் ஷெராப் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
ஆனால், சிவகார்த்திகேயன் அமரன் படம் இந்த இரு படங்களுக்கும் சவால் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த இரு படங்களுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் வலுவான மற்றும் சென்டிமென்டான திரைக்கதை காரணமாக அமரன் படத்திற்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால், இந்தியிலும் அமரன் வசூல் அதிகரித்து வருகிறது. அமரன் படம் மட்டுமின்றி துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்திற்கும் இந்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியின் இரண்டு பெரும் நடிகர்களின் படங்களுக்கு நிகரான வசூலை தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் குவித்து வருவதால் சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.