Pushpa 2: புஷ்பா 2 படத்தில் இருந்து பஹத்பாசில் விலகலா...? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு..!
புஷ்பா : தி ரூல் திரைப்படத்தில் இருந்து பஹத் பாசில் விலகியதாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புஷ்பா 2 படப்பிடிப்பில் பஹத் பாசில் இணைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான புஷ்பா : தி ரைஸ் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றியை கொண்டியது.
புஷ்பா:
பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலுமே சக்கை போடு போட்டது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் தூள் கிளப்பின. ஊ சொல்றியா மாமா... என்ற பாடலுக்கு நடனமாடி சமந்தா உலகளவில் பிரபலமானார். அவரின் அந்த ஒரே பாடலுக்காக பல கோடி வசூலானதாக கூறப்படுகிறது. இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் அடித்து துவைத்த புஷ்பா : தி ரைஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் புஷ்பா : தி ரூல் திரைப்படம் வெளியாக உள்ளது.
பஹத் இருக்காரா? இல்லையா?
புஷ்பா முதல் பாகத்தில் வில்லனாக கலக்கிய பஹத் பாசில் இரண்டாம் பாகத்தில் இணையவில்லை என்றும் இப்படத்தில் முக்கியமான வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி இணைய உள்ளார் என்றும் வதந்திகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பஹத் பாசில் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு பதிலாக நடிகர் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது.
தற்போது அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புஷ்பா : தி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பஹத் பாசில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் பாகத்தில் அவர் நடித்த அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார் என்ற செய்தியும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டிப்பு சர்ப்ரைஸ் :
புஷ்பா முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் இயக்குனர் சுகுமார். புஷ்பாவின் முதல் பார்ட் எப்படி பார்வையாளர்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதை விடவும் இரட்டிப்பான சர்ப்ரைஸ் புஷ்பா 2 படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் என உறுதியளித்துள்ளார்.