Manikantan Rajesh: சீரியல் நடிகையுடன் விவாகரத்து; சத்தமில்லாமல் 2-ஆவது திருமணம் செய்து குழந்தை பெற்ற மணிகண்டன் ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின், சகோதரர் பிக்பாஸ் மணிகண்டன் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த வேகத்தில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து குழந்தையும் பெற்றுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில், முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரை போலவே இவருடைய சகோதரர் மணிகண்டன் ராஜேஷும் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். சீரியல் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கிய மணிகண்டன் ராஜேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர்.... தொடர்ந்து வெள்ளி திரையில் காலூன்ற முயற்சி எடுத்து வருகிறார்.
அந்த வகையில் இதுவரை டிரைவர் ஜமுனா மற்றும் சமீபத்தில் ரிலீசான 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார்.

மணிகண்டன் ராஜேஷ், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அட்டகத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோபியா திருமணத்திற்கு பின்பு திரை உலகை விட்டு விலகிய நிலையில்... அவ்வப்போது கணவருடன் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டார்.
மணிகண்டன் உடனான விவாகரத்துக்கு பின்னர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மருமகள்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வல்லி ரோலில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவருமே தற்போது வரை தங்களுக்கு விவாகரத்தான தகவலை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், சோசியல் மீடியாவில் இருந்து இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கி விட்டனர். இதன் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. இவர்களுடைய மகன் சோபியா மற்றும் மணிகண்டன் இடம் மாறி மாறி இருந்து வருவதாக கூறப்படுகிறது.
சோபியாவை பிரிந்த பின்னர் தற்போது ஜிம் ஒன்றையும் நடத்தி வரும் மணிகண்டன் ராஜேஷ், விவாகரத்தான வேகத்தில் இரண்டாவது திருமணம் செய்து பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். அதே போல் மனைவி மற்றும் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தியும் ஷேர் செய்துள்ளார். இதில் மணிகண்டனின் மகனும்... தன்னுடைய தங்கையை கொஞ்சுவதை பார்க்க முடிகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மணிகண்டன் ராஜேஷுக்கு சில ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், இன்னும் சிலர் ... உங்களின் விவாகரத்துக்கு காரணம் இது தானா என விமர்சிக்கவும் துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















