எஸ்.எம்.எஸ். லிங்க் மூலம் பண மோசடி .. சிக்கியவர்களில் நடிகை ஸ்வேதா மேனனும் ஒருவரா? - உண்மை என்ன?
ஆன்லைன் வங்கி மோசடியில் தான் சிக்கவில்லை என நடிகை ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார். இவர் பணத்தை இழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆன்லைன் வங்கி மோசடியில் தான் சிக்கவில்லை என நடிகை ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார். இவர் பணத்தை இழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.
இன்றைய உலகில் அன்றாடம் பலவிதமான மோசடி நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. நினைத்த நேரத்தில் இருக்கும் இடத்தில் நாம் செய்யும் வேலைகளை முடிப்பதில் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வகையில் வங்கிக்குச் செல்லாமலே சுலபமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி நாளுக்கு நாள் எளிதாக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் இதில் ஏராளமாக பணமோசடி சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது.
அதன்படி மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.தங்கள் KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதனை நம்பிய வாடிக்கையாளர்களும் லிங்கை கிளிக் செய்ய, அடுத்தக் கணமே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மூன்று நாட்களுக்குள் லட்சக்கணக்கான பணம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு அறிவுரை ஒன்றையும் வழங்கியது. அதன்படி வங்கிகள் பெயரில் வரும் போலி லிங்க் கிளிக் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஆன்லைன் மோசடியில் நடிகை ஸ்வேதா மேனனும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மும்பை காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் ஆன்லைன் வங்கி மோசடி வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகை ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் செய்திகள் வெளியான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமானோர் தன்னை தொடர்பு கொண்டு விசாரித்ததாக தெரிவித்தார்.
ஒருவேளை என் பெயரைக் கொண்ட டிவி சீரியல் நடிகை இருக்கலாம் என்றும், என்னுடைய புகைப்படம் வெளியானதால் அனைவரும் நான் என நினைத்து விட்டார்கள் எனவும் ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.