HBD Samantha: வீழ்வேனென்று நினைத்தாயோ.! தன்னைத்தானே செதுக்கி பறந்த ஃபீனிக்ஸ்.. Happy Birthday சமந்தா..
அடுத்தடுத்த படங்கள், உடற்பயிற்சி, ஆன்மீக பயணம், பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய ஊ சொல்றியா டான்ஸ் என பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் சமந்தாவுக்கு இன்று 35வது பிறந்ததினம்.
திரைத்துறையில் இருந்தாலே எதாவது ஒரு கிசுகிசுவில் சிக்கிக் கொண்டே இருப்பார்கள் என்பது பொதுவான ஒன்றாகவே மாறிவிட்டது. அந்த வகையில் சமீப காலமாக அதிகம் செய்திகளிலும், சோஷியல் மீடியாவிலும் அடிபட்டவர் நடிகை சமந்தா. காதல் வாழ்க்கை கசந்த நிலையில் விவாகரத்து அறிவித்தார் சமந்தா.
அறிவிப்புக்கு முன்னரே அப்படியாமே, இப்படியாமே என சினிமா உலகம் கிசுகிசுக்கத் தொடங்கிய நிலையில் ஒரு அறிக்கை வெளியிட்டு விவாகரத்தை உலகுக்கு சொன்னார் சமந்தா. நன்றாக சென்ற சமந்தா வாழ்க்கையில் விவாகரத்து. இனி அவர் முடங்கிவிடுவார் என்றே சிலர் நேரடியாக சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டனர். ஆனால் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னரே சமந்தா முழு வேகத்தில் ஓடத்தொடங்கியுள்ளார். அடுத்தடுத்த படங்கள், உடற்பயிற்சி, ஆன்மீக பயணம், பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய ஊ சொல்றியா டான்ஸ் என பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் சமந்தாவுக்கு இன்று 35வது பிறந்ததினம்.
சமீபத்தில் இன்ஸ்டாவில் பேசிய சமந்தா தன்னுடைய முதல் சம்பளம் குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில், பள்ளியில் படிக்கும் போதே பார்ட் டைம் வேலையாக ஹோட்டலில் நடக்கும் விழாக்களை தொகுத்து வழங்கினேன் என்றும் முதல் சம்பளம் ரூ.500 என்றும் குறிப்பிட்டார். அப்படி தொடங்கிய சமந்தாவின் பயணம் இன்று கோடிகளில் சென்றுகொண்டிருக்கிறது என்றால் அதற்கு பின் பெரும் உழைப்பு இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு தொடக்கக்கால தமிழ் சினிமா உடனடியாக கைகொடுக்கவில்லை. கல்லூரி காலத்திலேயே மாடலிங், விளம்பரங்களில் நடிப்பு என திரைவாழ்க்கைக்கான அடித்தளமிட்டாலும் தமிழ்த்திரையுலகில் கால்பதிக்க சில எடுத்தது. விளம்பரங்களில் சமந்தாவின் துடிப்பான நடிப்பைக் கண்ட ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், அவரை மாஸ்கோவின் காவேரி படத்தில் ஒப்பந்தம் செய்தார். அதுதான் சமந்தாவின் முதல் படம்.
ஆனால் திரையில் சமந்தா தோன்றியது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம். தமிழில் சின்ன வேடம்தான் என்றாலும் தெலுங்கில் நாயகியாக நடித்தார். அந்தப்படமே அவரின் காதல் வாழ்க்கைக்கும் அடித்தளமிட்டது. அதற்கு பின் தமிழைவிடவும் தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார் சமந்தா. பிருந்தாவனம், மகேஷ்பாபுவின் தூக்குடு போன்ற படங்கள் தெலுங்கில் மெகா ஹிட் அடித்தன. இந்தப்படங்கள் சமந்தா ஒரு தவிர்க்க முடியாத நாயகி என்றே தெலுங்கில் பதியவைத்தன. அதேவேளையில் தமிழில் பெரிய ரீச் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருந்தார். சரியான வாய்ப்பாக அவருக்கு கிடைத்தது நான் ஈ திரைப்படம்.
க்யூட் க்யூட் ரியாக்ஷன் மூலம் நான் ஈ சமந்தா தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டார். அந்த நேரத்தில் பெரிய படங்கள் கதவைத் தட்டத் தொடங்கின. கடல், சங்கரின் ஐ போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் சமந்தாவுக்கு வலை விரித்தன. சரியான வாய்ப்பு வந்தபோதும் சூழ்நிலை சமந்தாவை நிராகரிக்க வைத்தது.
தோல் ஒவ்வாமை போன்ற சில உடல் ரீதியிலான சிக்கலில் சிக்கிய சமந்தா, தேடி வந்த படங்களை நிராகரித்து உடல்நிலையில் கவனம் செலுத்தினார். பின்னர் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையை தமிழ்த்திரையுலகுக்கு காட்டினார். அதன்பின்னர் சமந்தாவை தமிழில் கவனிக்கவைத்த திரைப்படம் அஞ்சான்.
படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் சமந்தாவுக்கு ஒரு நல்ல எண்ட்ரியாக அமைந்தது. அதன்பின்னர் கத்தி திரைப்படத்தின் விஜய் உடன் நடித்து தெலுங்குக்கு இணையான இடத்தை தமிழில் பிடித்தார். பின்னர் இடையிடையே தமிழில் சில படங்கள் சமந்தாவுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் தெறி, மெர்சல் போன்ற விஜய்-சமந்தா கூட்டணி ஹிட் அடித்தன. அதன்பின்னர் யூடர்ன், ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ், இரும்புத்திரை போன்ற படங்களில் கவனிக்க வைத்தார் சமந்தா.
திரைப்படங்கள் தாண்டி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி, மலையாளம் என்ற பூர்வீகத்தை உடைத்து தமிழ் பேசும் நம்ம ஊர் பெண் என்ற தனித்துவத்தால் எளிதில் ரசிகர்களை கவர்ந்த சமந்தா, இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கைவசம் படங்களை வைத்திருக்கிறார்.
வீழ்ந்துவிட்டார் என உலகம் சொல்லும்போது எழுந்து வேகமாக ஓடும் சமந்தா, சமீபத்தில் இளம் பெண்களுக்கு சொன்ன அட்வைஸ் , ''உங்களை நீங்களே சந்தேகம் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் அந்த சூழ்நிலையை உருவாக்கவும் அனுமதிக்காதீர்கள். உங்கள் கனவைத் துரத்துங்கள்'' என்பதுதான். தன்னுடைய அறிவுரையைப்போலவே கனவைத்துரத்தும் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!