Reshma Pasupuleti : “என்னன்னு தெரியாம பெண் பிரபலங்களை கீழ்த்தரமாக பேசாதீங்க” - கடுப்பான ரேஷ்மா
பெண் பிரபலங்களின் பின்னணி என்ன தெரியாமல் ஒருவரை பற்றி முடிவு செய்வதை நிறுத்துங்கள் என நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்துள்ளார்.
பெண் பிரபலங்களின் பின்னணி என்ன தெரியாமல் ஒருவரை பற்றி முடிவு செய்வதை நிறுத்துங்கள் என நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதில் . விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இதில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்து வருகின்றனர். இப்படியான நிலையில் இருவரும் இணைந்து நேர்காணல் ஒன்றில் தாங்கள் திரைத்துறையில் சந்தித்த அனுபவங்கள் பற்றி பேசியுள்ளனர்.
நிறைய படங்கள் கைவிட்டு போனது - நடிகை சுசித்ரா ஷெட்டி
இந்த துறைக்கு வந்தாலும் 25 ஆண்டுகள் இன்னும் பெரிய அளவில் சாதனை படைக்கவில்லை. எனக்கு எது வருமோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு பயணித்து வருகிறேன். நான் நாடக்குழுவில் இருந்து வந்ததால் அங்கு எல்லாமே மிகத்துல்லியமாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது எனக்கு தெரிய வேண்டும். திரைத்துறையை எடுத்து கொண்டால் ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. தேவையில்லாமல் கதைக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் போது நீச்சல் உடை அணிய வேண்டும் என சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். இதனால் நிறைய படங்கள் கைவிட்டு போனது. மறைந்த நடிகர் முரளியின் அப்பா தான் காட்சியின் முக்கியத்துவம் குறித்து கற்றுக்கொடுத்தார்.அதன் பிறகு உபேந்திரா தனது படங்களில் பல விஷயங்களை புரிய வைத்தார்.
எனக்கு சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கவே விருப்பமில்லை. ஆனால் ரேஷ்மா சொன்னார் என்கிற காரணத்துக்காகவே என்னுடைய போட்டோவை போடுகிறேன். என்னுடைய குடும்பம் பற்றி பொதுவெளியில் பகிர்வதை நான் விரும்பவும் மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
ஆவேசப்பட்ட நடிகை ரேஷ்மா
நடிகை ரேஷ்மா பேசுகையில், “திரைத்துறையை மட்டுமே நான் சார்ந்து இல்லை. தமிழில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன், அதன்பிறகு சீரியல்கள், படங்கள் என இதனை பிற மொழிகளிலும் செய்து வருகிறேன். இந்த துறையில் நான் படிப்படியாகவே மேலே வந்துள்ளேன். நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. என்னை தேடி வந்த ப்ராஜெக்டில் மட்டுமே நடிப்பேன். அதனால் தான் குறைவான படங்களில் நடித்துள்ளேன். நான் நடித்துள்ள படங்கள் எல்லாம் நான் சொன்ன கண்டிஷன்படி தான் எடுத்தார்கள். பட வாய்ப்பு வரும் போது இதை மட்டுமே என்னால் பண்ண முடியும், முடியாது என வெளிப்படையாக சொல்லி விடுவேன். நான் நடிச்ச கேரக்டர்கள் நீங்கள் பார்க்கும்போது கவர்ச்சியாக தோன்றலாம். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் முதல் விலங்கு சீரிஸ் வரை அப்படித்தான் அமைந்தது. இதுவரை எந்த பெரிய பிரச்சினையும் நடக்கவில்லை.
பெண் பிரபலங்களை கீழ்த்தரமாக பேசாதீர்கள். அவர்களின் பின்னணி, சூழ்நிலை என்னன்னு தெரியாமல் முடிவு பண்றதை நிப்பாட்டுங்க. நாங்க இந்த துறை, வீடு என அனைத்து இடங்களிலும் பல சவால்களை எதிர்கொள்கிறோம். அதனால் நீங்க ஒருத்தரை பற்றி முடிவு பண்றதை நிப்பாட்டுங்க” என தெரிவித்துள்ளனர்.