"ஜெயிச்சுடு மாறா.." உருவானது எப்படி தெரியுமா? மனம் திறந்த நடிகை ஊர்வசி
சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்ற ஜெயிச்சுடு மாறா வசனம் இடம்பெற்ற காட்சி எப்படி உருவானது என்பதை நடிகை ஊர்வசி விளக்கமாக கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. சாதாரண கிராமத்து இளைஞன் சொந்தமான விமான நிறுவனத்தை தொடங்குவதே படத்தின் கதை. கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ஜெயிச்சுடு மாறா:
இந்த படத்தில் இடம்பெற்ற ராஜாங்கம் நெடுமாறன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார். படம் முழுக்க அவரை மாறா என்றே அழைப்பார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற ஜெயிச்சுடு மாறா என்ற வசனமும், நாம ஜெயிச்சுட்டோம் மாறா என்ற வசனமும் மிகவும் பிரபலம்.
தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை ஊர்வசி. இவர் இந்த படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார். குறிப்பாக, சூர்யாவிற்கு உத்வேகம் அளிக்கும் காட்சியில் இவரது நடிப்பு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. இந்த காட்சி எப்படி உருவானது? என்பதை அவர் நிகழ்ச்சி ஒன்றில் விளக்கமாக கூறியிருப்பார்.
ஊர்வசி தந்த விளக்கம்:
ஊர்வசி இதுதொடர்பாக பேசியதாவது, ஜெயிச்சுடு மாறா எப்படி எடுத்தாங்க தெரியுமா? நான் அந்த படத்தில் 30 நாட்கள் வேலை பாத்திருக்கனும். வேற படங்கள் போயிகிட்டு இருந்ததால 8 நாள்தான் என்னால வேலை பாக்க முடிஞ்சது. எல்லா சீனும் முன்ன, பின்ன எடுத்துட்டு நடுவுல ஃபிக்ஸ் பண்ற மாதிரிதான் என் காட்சி வரும்.
டெலிபோன் பூத்ல 2 மணி நேரம் வச்சுருந்தாங்க. முதல்ல வந்து இறங்குன உடனே மேடம் நீங்க அவனுக்கு மோடிவேஷன் தர்ற மாதிரி ஒரு வார்த்தை பேசுங்க. நீ ஜெயிச்சுடுப்பா அப்படினுதான் சொல்லனும். நான் சொல்லிட்டேன் மாறா நீ ஜெயிச்சுடு மாறா அப்படிங்குறதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
மிகப்பெரிய வரவேற்பு:
2020ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பூ ராமு, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், காளி வெங்கட் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கொரோனா காரணமாக திரையரங்குகள் திறப்பதற்கு கட்டுப்பாடுகள் இருந்த காலம் என்பதால் இந்த படத்தை அமேசானில் வெளியிட்டனர். இந்த படத்தில் தந்தை மரணம் அறிந்தும் வெளியூரில் வசிக்கும் சூர்யா அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு வந்து தனது தாய் ஊர்வசியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியில் சூர்யா - ஊர்வசி நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிடும்.
இந்த படம் இந்தியிலும் சார்ஃபியா என்ற பெயரில் உருவானது. அகஷய் குமார் நடித்த இந்த படம் அங்கு தோல்வியே அடைந்தது.






















