கவர்ச்சி நடிகை கடவுளாக நடிக்க கூடாதா.. நயன்தாராகிட்ட கேட்க மாட்டீங்க.. நடிகை கஸ்தூரி நச் பதிலடி
ராகு கேது படத்தில் அம்மனாக நடித்திருப்பது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் நடிகை கஸ்தூரி அளித்த பதிலடி கொடுத்தார்.

90களில் பிரபு, விஜயகாந்த், ரஜினி, கமல் ஆகியோரின் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கஸ்தூரி. இதைத்தாடர்ந்து குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் காமெடி ரோல்களிலும் நடித்து வருகிறார். தற்போது, ராகு கேது படத்தில் துர்க்கை அம்மனாக கஸ்தூரி நடித்திருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது. ஒரு கவர்ச்சி நடிகை அம்மனாக நடிப்பதா என விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழில் 35 வருடங்களுக்கு பிறகு முழு பக்தி படமாக ராகு கேது வெளியாக இருக்கிறது. இயக்குநர் தமிழ்மாமனி துரை பாலசுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, கஸ்தூரி, விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கே.பி அறிவானந்தம் கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் வரும் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி சிவனாகவும், விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும், கஸ்தூரி துர்க்கை அம்மனாக நடித்துள்ளனர்.
மனிதர்களின் வாழ்வில் ராகு - கேது கிரகங்கள் எப்படி ஆட்டிப்படைக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை கடவுள் மூலம் மனிதர்களின் பிரச்னை தீர்ந்ததா என்பதை விளக்குவதே கதையாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் புரோமோஷன் பணி நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் கவர்ச்சி நடிகை எப்படி அம்மனாக நடிக்கலாம் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், கவர்ச்சியும் நடிப்பு தான்; அம்மனாக தோன்றுவதும் நடிப்புதான். இதில் நான் ஒன்றும் முதலும் இல்லை, கடைசியும் இல்லை. கவர்ச்சி நடிகைக்கு அம்மன் வேடமா என்று கேட்காதீர்கள். எனக்கு முன்பு ரம்யா கிருஷ்ணன், மீனா, நயன்தாரா ஆகியோர் அம்மனாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் கவர்ச்சியாக நடிக்கும் போது ஏற்றுக்கொண்ட மக்கள் அம்மனாக நடித்ததையும் ஏற்றுக்கொண்டனர். நான் அடுத்து பார்வதியாகவும் நடிக்க இருக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.





















