சூரி கூட நடிச்சா என்ன பிரச்சன...மாமன் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கொடுத்த செம பதில்
மாமன் படத்தில் சூரியுடன் நடிப்பது குறித்து பலவிதமான கேள்விகளை எதிர்கொண்டதாக படத்தின் நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்

சூரி நடித்துள்ள மாமன்
விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்த சூரி அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். கருடன் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் விடுதலை 2 திரைப்படம் நடிப்பு ரீதியாக அவருக்கு பாராட்டுக்களை சேர்த்தது. கடந்த ஆண்டு வெளியான கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றாலும் தமிழ் ரசிகர்களிடம் கவனமீர்க்கவில்லை. இப்படியான நிலையில் சூரி நடித்துள்ள ஃபேமிலி என்டர்டெயினர் படம்தான் மாமன்
மாமன் படக்குழு
பிரசாந்த் பாணியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், மாஸ்டர். பிரகீத் சிவன், பால சரவணன், ஜெய பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மெல்வின், திருச்சி அனந்தி, சாவித்திரி, சாரதா, தமிழ் செல்வி, ரயில் ரவி, உமேஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதை சூரியின் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வொன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஹேஷம் அப்துல் வகப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மே 16 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாமன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் நாயகி சூரி பற்றி பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
எந்த ஸ்டாருக்கும் குறைந்தவர் இல்லை
" வந்தாரை வாழவைக்கும் ஊரு தமிழ்நாடு என்று சொல்வார்கள். அந்த வகையில் எனக்கு உங்கள் மனதில் இவ்வளவு பெரிய இடத்தை கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் நான் நடிக்க முடிவானபோது பலரிடம் இருந்து ஒரே கேள்வியை எதிர்கொண்டேன். சூரி கூட நடிக்க உங்களுக்கு ஓக்கேவா என்று பலர் கேட்டார்கள். ஏன் அப்படி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. சூரி ரொம்ப உயரத்தில் இருக்கிறார். இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய ஸ்டாருக்கும் குறைந்தவர் இல்லை சூரி. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் மரியாதை இருக்கிறது. ஒவ்வொரு செயலிலும் நேர்மை இருக்கிறது. சூரி சார் கூட நடிப்பது என்பது எனக்கு ஒரு பெருமை. எல்லா மக்கள் மேலயும் அன்பு இருக்கு. உங்களுடன் நடிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி " என ஐஸ்வர்யா லக்ஷ்மி பேசியுள்ளார்.




















