Y.G.Mahendran: உள்நோக்கத்தோடு சாதிப்படங்கள் எடுக்கப்படுகிறது .. இயக்குநர்களை சாடிய ஒய்.ஜி.மகேந்திரன்!
சாதியை பிரதானமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கூறியுள்ளார்
ஒய் ஜி மகேந்திரன்
1971 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ’நவக்கிரகம்’ திரைப்படம் மூலமாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார் ஒய்.ஜி.மகேந்திரன். முதல் படத்திலேயே வித்தியாசமான வசன உச்சரிப்பால் அதிக கவனம் பெற்றார். மகேந்திரன் மூக்கால் பேசும் வித்தியாசமான வசன உச்சரிப்பு , பலருக்கும் பிடித்துப்போனது. அதன் பிறகு கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்தவர்.
சிறந்த துணை கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் , காமெடி என பன்முக வேடங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் , சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் என பல ஜாம்பவான்களோடு நடித்து அசத்தியிருந்தார். இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.இது தவிர 10 க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன் தமிழ் படங்களில் சாதி குறித்து தனது கருத்துக்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சாதியை வைத்து படம் எடுப்பதை நிறுத்துங்கள்
”நான் காலேஜில் படிக்கும்போது திரைப்படங்களில் இவ்வளவு வன்முறை இருந்ததில்லை. அப்படியே இருந்தாலும் எம்ஜிஆர் படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் தான் . ஆனால் இன்று ஒரு படத்திற்கு செட் பிராபர்ட்டி வாங்கும் போது ரத்தம் தான் நிறைய வாங்குகிறார்கள். சாதியைப் பற்றி பேசமால் இருந்தாலே அது அடங்கிவிடும். ஆனால் ஒரு சில இயக்குநர்கள் இருக்கிறார்கள் , அவர்கள் உள்நோக்கத்தோடு சாதியைப் பற்றிய படங்களை எடுத்து மக்களை தூண்டி விடுகிறார்கள். சாதியைப் பற்றி பேசினால் பின் அதில் வன்முறை வரும்.
ஏன் சும்மா சும்மா சாதியை கிளப்பிவிடுறீங்க. சமீபத்தில் தூக்கத்தைப் பற்றி குட்நைட் என்கிற அற்புதமான படம் வெளியானது. இப்படியான புதிய கதைகளை இயக்குநர்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டும். என்னை சாதியைப் பார்த்தா மக்கள் தெரிந்துகொண்டார்கள். கலைஞனை அவனது சாதனைகளை பார்த்து தான் மக்கள் அடையாளம் காண வேண்டுமே தவிர அவனது சாதியை வைத்து இல்லை” என்று ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடரும் சர்ச்சை
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சாதிகளை அடிப்படையாக கொண்டு படங்கள் வெளிவந்துள்ளது. அப்போது அவை விமர்சிக்கப்படவில்லை. இப்போது சாதி பாகுபாடு தவறு என்று ஒரு தரப்பும், சாதி சரிதான் என்று தரப்பும் சொல்லி படங்கள் வந்து விவாதமாகியுள்ளது