Madha Gaja Raja Box Office:கோடிகளில் புரளும் மதகஜராஜா! நாளுக்கு நாள் எகிறும் வசூல் - குஷியில் விஷால்
12 வருடங்களுக்குப் பிறகு ரிலீசான மதகஜராஜா திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் மதகஜராஜா. ஆனால், பல காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், நடப்பாண்டு பொங்கல் விருந்தாக மதகஜராஜா ரிலீசானது.
மதகஜராஜா ரிலீஸ்:
12 வருடங்களுக்குப் பிறகு ரிலீசாகும் படம், இந்த படத்தின் ட்ரெயிலரில் காணப்பட்ட காட்சிகள் பலவும் அடுத்து ரிலீசான சுந்தர் சி-யின் படங்களில் பார்த்த நிலையில் இந்த படம் எப்படி இருக்கும்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மேலும், வணங்கான், நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை, ராம்சரணின் கேம் சேஞ்சர் படங்கள் ரிலீசாகியதாலும் இந்த படத்தின் நிலை என்னவாகும்? என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், 12ம் தேதி ரிலீசான இந்த படம் மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படம் முதல் நாளில் 3 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 3 கோடி ரூபாயும், 3வது நாளான நேற்று முன்தினம் மட்டும் 6 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது.
தொடரும் வசூல் வேட்டை:
தற்போது வரை படம் ரிலீசாகி 3 நாளில் மட்டும் மதகஜராஜா படம் ரூபாய் 12.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஞாயிறு வரை கல்லூரி, பள்ளிகள் மற்றும் பல அலுவலங்களுக்கு விடுமுறை என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் படையெடுப்பது உறுதியாகும்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நல்ல நகைச்சுவைத் திரைப்படம் வந்துள்ளதாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியான படத்தில் மதகஜராஜா மட்டுமே முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். மதகஜராஜா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் வரவேற்பு
ஜெமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி நடித்துள்ளனர். சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி, சீனு மோகன், சிட்டிபாபு ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுந்தர் சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதால் படக்குழு எதிர்பார்த்ததை விட அதிகளவு வசூலை மதகஜராஜா ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல படங்களின் போட்டிக்கு மத்தியில் பொங்கல் ரேஸில் 12 வருடங்களுக்குப் பிறகு களமிறங்கிய மதகஜராஜா படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமாக பொங்கல் வெற்றி படமாகவும் மாறியுள்ளது.