19 Years of Vishal: ‘யாரு சாமி நீ?’ .. தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி.. விஷால் அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவு..!
19 Years of Vishal: தமிழ் சினிமாவின் புரட்சி தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஷால் இன்றுடன் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தமிழ் சினிமாவின் புரட்சி தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஷால் இன்றுடன் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவடைகிறது.
‘சண்டகோழி நாயகன்’
தமிழ் சினிமாவில் வலம் வரும் வாரிசு நடிகர்களில் நடிகர் விஷாலும் ஒருவர்.தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகனான விஷால் நடிகர் அர்ஜுனிடம் அவர் இயக்கிய ‘வேதம்’ படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது விஷாலை பார்த்த இயக்குந்னர் காந்தி கிருஷ்ணா தனது செல்லமே படத்தில் ஹீரோவாக நடிக்க அணுகினார். அவரின் அழைப்பை ஏற்ற விஷால் கூத்துப்பட்டறையில் நடிப்பதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு ‘செல்லமே’ படத்தில் அறிமுக நாயகனாக களம் கண்டார். இந்தப் படம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஆறடி உயரம், கருமையான நிறம், புதிய முகம் என்றெல்லாம் ரசிகர்கள் பார்க்கவில்லை. முதல் படத்திலேயே தான் ஒரு ஆக்ஷன் ஹீரோ என்பதற்கு ஏற்ப அழகாக பெர்ஃபார்மன்ஸ் செய்திருந்தார் விஷால். இப்படியான நிலையில் விஷாலின் இரண்டாவது படமாக ‘சண்டக்கோழி’ 2005 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியானது. தமிழ் சினிமாவின் சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் சண்டக்கோழி படத்தை விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி சொந்தமாக தயாரித்தார். இந்தப் படத்தில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் இந்தப் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விஷாலின் சினிமா கேரியாரை மேலும் உயர்த்தியது.
அண்ணியுடன் மோதிய விஷால்
மூன்றாவதாக விஷாலுக்கு தருண் கோபி இயக்கிய திமிரு படம் வெளியானது. இந்தப் படத்தில் பெண் வில்லி கதாபாத்திரத்திற்கு எதிராக ஹீரோயிசம் காட்டிருப்பார் விஷால். அந்த வில்லி கேரக்டரில் நடித்த ஸ்ரேயா ரெட்டிய பிற்காலத்தில் விஷாலின் அண்ணனான நடிகர் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, முதல் மூன்று படங்களும் ஹிட்டடிக்க விஷால் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க ஹீரோவாக மாறினார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி, மலைக்கோட்டை ஆகிய படங்கள் ஃபேமிலி ஆடியன்ஸை விஷாலுக்கு பெற்றுக் கொடுத்தன. மேலும் தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டியநாடு, நான்சிகப்பு மனிதன், ஆம்பள, பூஜை, மருது, துப்பறிவாளன், இரும்புத்திரை, அயோக்யா என இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக மார்க் ஆண்டனி படம் வெளியாகவுள்ளது. சில படங்களில் விஷால் கேமியோ ரோலும் பண்ணியுள்ளார்.
தயாரிப்பாளர்- பாடகர் - இயக்குநர் அவதாரம்
ஹீரோவாக சில படங்கள் தன் தந்தையில் பேனரில் நடித்த விஷால் சொந்தமாக ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதில் அவர் நடித்த பல படங்களை தயாரித்தார். இதற்கிடையில் இயக்குநர் சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகி ரிலீசாகாமல் இருக்கும் ‘மதகஜராஜா’ படத்தில் விஜய் ஆண்டனி இசையில் ‘மை டியர் லவ்வரு’ பாடலை பாடி பாடகராக எண்ட்ரீ கொடுத்தார். அதேபோல் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வந்த விஷால், திடீரென மிஷ்கினை நீக்கி விட்டு தானே இயக்குநராக அவதாரம் எடுத்து அசத்தினார்.
இந்த 19 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் விஷாலின் வளர்ச்சி வேறு மாதிரியாகவே பார்க்கப்படுகிறது. நடிகர் சங்க தேர்தலில் 2 முறை நின்று பொதுச்செயலாளராக வெற்றி பெற்று அசத்தினார். இப்படி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல சம்பவங்களை செய்துள்ளார் விஷால்.