Chiyaan Vikram: ஓ போடு, தங்கலான் அப்டேட் வரும்.. ஜெமினி ரிலீஸ் நாளில் சீயான் விக்ரம் பகிர்ந்த சூப்பர் விஷயம்!
Chiyaan Vikram Tweet: நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சீயான் விக்ரம் (Chiyaan Vikram)
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டால் அதில் நடிகர் விக்ரமின் பெயர்கள் நிச்சயம் இடம்பெறும். சேது , பிதாமகன் , அந்நியன் , ஐ , தற்போது தங்கலான் என ஒரு படத்திற்கு இன்னொரு படத்திற்கு அவ்வளவு வித்தியாசம் காட்டக் கூடியவர்.
மறுபக்கம் தூள், தில், சாமி என பக்கா கமர்ஷியல் - ஆக்ஷன் நடிகராகவும் தன்னை நிரூபித்தவர் விக்ரம். விக்ரமை ஒரு மாஸ் நடிகராக அடையாளம் காட்டியப் படங்களில் முக்கியமானது ஜெமினி. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துள்ளன. உள்ளூர் கேங்ஸ்டராக இப்படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரம், அவர் பேசும் ‘ஓ போடு’ வசனம் என இன்றுவரை விக்ரமின் டிரேட்மார்க்காக அவை மாறியுள்ளன. ஜெமினி படம் 22 ஆண்டுகளை கடந்துள்ளதைத் தொடர்ந்து இந்தப் படம் பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக இன்று பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் ஜெமினி படத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். இத்துடன் இன்னும் சில நாட்களில் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 17ஆம் தேதி நடிகர் விக்ரம் தனது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் தற்போது நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அவரது பிறந்தநாளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தங்கலான் தவிர்த்து அருண்குமார் இயக்கத்தில் சீயான் 62 படத்திலும் தற்போது விக்ரம் நடித்து வருகிறார். எஸ்.ஜே சூரியா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
மிக்க நன்றி.. for all the love pouring in today. Interesting updates .. இன்னும் சில தினங்களில்.
— Vikram (@chiyaan) April 12, 2024
Any guesses??
& don’t forget to ஓ போடு!! ❤️ pic.twitter.com/3wtq8Yrfbv
தங்கலான்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் விக்ரம் , மாலவிகா மோகனன் , பார்வதி திருவோத்து , பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தங்கலான் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலால் ஒத்திவைக்கப் பட்டது, வரும் மே மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.