Vijay Sethupathi : "அதனால எனக்கு நிறைய பிரச்சன வருது"...வில்லன் கதாபாத்திரங்களுக்கு நோ சொன்ன விஜய் சேதுபதி
இனிமேல் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்திருந்த நிலையில் ஏன் என்கிற காரணத்தை தற்போது கூறியுள்ளார்
விஜய் சேதுபதி
சூப்பர்ஸ்டார் ரஜினி தொடங்கி சினிமாவில் பல நடிகர்கள் தங்களது கரியரை வில்லன் கேரக்டர்களில் நடித்துதான் தொடங்கியிருக்கிறார்கள். நடிகர் ரகுவரன் மாதிரியான சில நடிகர்கள் குனசித்திர கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்தாலும் மக்கள் மனதில் அவர்கள் வில்லனாகவே பதிந்துவிடுகிறார்கள். வில்லனாக நடித்தால் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிற பொது புரிதல் எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் சத்யராஜ் , பிரகாஷ் ராஜ் போன்ற பல நடிகர்கள் அந்த எண்ணத்திற்கு மாறாக தங்களை உணர்ச்சிவசமான கதாபாத்திரங்களில் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் வில்லன் கதாபாத்திரத்தை விரும்பி ஏற்று நடித்தவர் விஜய் சேதுபதி.
சுந்தரபாண்டி , மாஸ்டர் , விக்ரம் , இந்தியின் ஜவான் போன்ற பெரிய ஸ்டார்களின் படத்தில் வில்லனாக நடிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லை. அதிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி ஒரு படத்தில் ஹீரோவிடம் அடிவாங்குவது போல் நடிக்கும் சவாலை விரும்பி ஏற்றுக்கொண்டார். மேலும் தான் நடித்த கதாபாத்திரங்களை தனது நடிப்பின் மூலம் தனித்துவமானதாகவும் காட்டியிருக்கிறார். தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி திடீரென்று இனிமேல் தான் வில்லன் ரோலில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். இதற்கான காரணத்தை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்
வில்லன் ரோலில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி
" எல்லா வில்லனுக்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஒரு ஹீரோவுக்கு அவன் நல்லவனாக இருக்க ஒரு நியாயம் இருக்கிறது என்றால் , ஒரு வில்லனுக்கும் அவன் கெட்டவனாக இருப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. அதனால் தான் நான் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க சம்மதித்தேன். விக்ரம் படத்தில் சந்தானம் என்ன பண்ணாலும் அவன் தன் குடும்பத்திற்காக தான் செய்வான். தொடர்ச்சியாக வில்லன் கேரக்டரில் நடிக்கும்போது அதே மாதிரி நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதனால் எனக்கு நிறைய பிரச்சனை வருகிறது. என்னால் எல்லாவற்றையும் பொறுமையாக விளக்கி சொல்ல முடியாது. ஆனால் சிலர் தான் ஏதோ தனிப்பட்ட கோபத்தால் நடிக்க மாட்டேன் என்று சொல்வதாக நினைத்துக் கொண்டு சிலர் என்னிடம் கோபித்து கொள்கிறார்கள். என்னால் நிறைய பேரிடம் கதை கேட்க முடியவில்லை எனக்கு அதற்கான நேரம் இல்லை. அதனால் ஏன் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்த்த இனிமேல் வில்லனாக நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்" என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2 வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது