GOAT Collection: தொடரும் ஹவுஸ்புல்! விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது. இது படக்குழுவினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் நேற்று வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
கோட் படத்தின் வசூல் என்ன?
த.வெ.க. கட்சியைத் தொடங்கிய பிறகு விஜய் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியதால், அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமாக இந்த படம் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே வழக்கத்தை காட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உலகம் முழுவதும் வெளியான கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவுாகியுள்ள இந்த படம் இந்தியா முழுவதும் முதல் நாள் மட்டும் ரூபாய் 43 கோடி வசூல் செய்துள்ளது.
அதிகரிக்கும் வசூல்:
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கிலும் இந்த படம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் திரையரங்கில் வெளியாகியுள்ள இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு முதல் நாளை மறுநாள் இரவு காட்சி வரை திரையரங்கம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இன்று அல்லது நாளை கோட் படத்தின் வசூல் ரூபாய் 100 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். விஜய்யுடன் இந்த படத்தில் பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா நடித்துள்ளனர். மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் வில்லனாக நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். மேலும், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தோற்றத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.