Suriya : "நாம பயப்படும்போது தான் குதிக்கனும்...அப்படியான கதையை தான் தேர்வு செய்கிறேன்" - சூர்யா
கங்குவா படத்தின் கதையை தேர்வு செய்த காரணத்தைப் பற்றி நடிகர் சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார்
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து நடிகர் சூர்யா அளித்த பேட்டியில் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். கங்குவா படத்தின் கதையை தேர்வு செய்த காரணம் குறித்து நடிகர் சூர்யா பேசியுள்ளது கவனிக்கத் தக்கது.
ஏன் கங்குவா படம்?
" ஒவ்வொரு முறை கதை கேட்கும் போதும் அந்த கதாபாத்திரத்தை என்னால் நம்பும்படியாக நடிக்க முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். கஜினி படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது இந்த மாதிரியான கதாபாத்திரத்திற்கு என்னால் உயிர் கொடுக்க முடியுமா என்கிற பயம் எனக்கு வந்தது. எனக்கு எப்போ பயம் வருகிறது அப்போதான் நான் குதிப்பேன். கங்குவா படத்தின் கதை கேட்பதற்கு முன்பாக நான் கீழடி சென்றிருந்தேன். மற்ற கலாச்சாரத்திற்கு வெறும் 500 ஆண்டுகள் பழமையான வரலாறு இருக்கிறது. ஆனால் தமிழ் கலாச்சாரத்திற்கு மட்டும் தான் 2500 ஆண்டு பழமையான வரலாறு இருக்கிறது. கீழடியில் இருந்த பழமையான நகைகளை எல்லாம் பார்த்து அன்றைய காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. உண்மையை சொன்னால் நான் பிரபாஸ் மாதிரி கிடையாது. பாகுபலி மாதிரியான கதைகளில் நான் நடித்தது இல்லை. கங்குவா மாதிரியான ஒரு கதையில் நான் நடிக்க முடியுமே என்கிற பயம் எனக்கு வந்தது. அப்போதான் இந்த படத்தில் நான் நடிக்க சம்மதித்தேன். நிச்சயம் இந்த படம் இதுவரை தமிழ் சினிமா கொடுத்திராத ஒரு புது அனுபவவமாக அனைவருக்கும் இருக்கும்.
இந்த படத்தை நாங்கள் 4D யிலும் வெளியிடுகிறோம். இந்த படம் எனக்கு மட்டும் புதிதில்லை. இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகிய எல்லாருக்கும் ஒரு புதிய முயற்சிதான். இந்த முயற்சி நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்" என சூர்யா தெரிவித்துள்ளார்.
கங்குவா படக்குழு
கங்குவா படத்தில் திஷா பதானி , பாபி தியோல் , கருணாஸ் , ரெடின் கிங்ஸ்லி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார். தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது.