Suriya - Prithviraj: "வாழ்வில் ஒருமுறைதான் கிடைக்கும் வாய்ப்பு.." நடிகர் ப்ரித்விராஜை புகழ்ந்த சூர்யா!
ப்ரித்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்திற்காக நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இப்படியான ஒரு வாய்ப்பு வாழ்வில் ஒருமுறைதான் கிடைக்கும் என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
ஆடு ஜீவிதம்
மலையாள இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடித்துள்ள படம் ஆடு ஜீவிதம் . அமலாபால் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்ட இந்தப் படம் 16 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பின் வரும் மார்ச் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. நஜீப் முகமத் என்பவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மனைச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் எழுதப்பட்ட ஆடு ஜீவிதம் என்கிற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகி இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டு சர்வதேச ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று தற்போது திரையரங்கில் வெளியாகிறது ஆடு ஜீவிதம்.
சமீபத்தில் வெளியான மலையாளப் படங்ளான பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் பிரமயுகம் ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்ததைத் தொடர்ந்து இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இப்படத்தில் ப்ரித்விராஜின் தோற்றம் மற்றும் நடிப்பு அனைவரிடமும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இப்படியான நிலையில் நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ப்ரித்விராஜ் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்
14 years of passion to tell a story of survival #Aadujeevitham This transformation & effort to put this together can happen only once in a lifetime! Heartiest wishes to @DirectorBlessy & Team @PrithviOfficial & @arrahman Sir for a grand release. https://t.co/yCiMW2xoq7
— Suriya Sivakumar (@Suriya_offl) March 26, 2024
தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா “ உயிர்பிழைக்கும் போராட்டத்தின் கதையைச் சொல்ல 14 ஆண்டுகால உழைப்பு. இதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் அமையும். நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் ப்ளெஸ்ஸி மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். சூர்யாவின் பதிவிற்கு நடிகர் ப்ரித்விராஜ் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கங்குவா
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.





















