Soori: “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது இந்தியாவுக்கே பெருமை” - நெகிழ்ந்த சூரி!
மதுரையே விண்ணதிரும் அளவுக்கு மக்கள் “நாராயணா.. கோவிந்தா.கோவிந்தா” என பக்தர்கள் முழக்கமிட்டு தோல்பையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் உலகத்துக்கே முக்கியமான திருவிழா என நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் நிகழ்வுகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரையே விண்ணதிரும் அளவுக்கு மக்கள் “நாராயணா.. கோவிந்தா.கோவிந்தா” என பக்தர்கள் முழக்கமிட்டு தோல்பையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர். இந்த நிகழ்வில் மதுரையைச் சேர்ந்த பிரபல நடிகரான சூரி, பின்னணி பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#WATCH | Tamil Nadu: Thoonga Nagaram (the city that never sleeps), Madurai remained awake through the night to witness Lord Kallazhagar's entry into the into Vaigai river this morning, as a part of Chithirai festival. The Chithirai festival began at Meenakshi Amman Temple on… pic.twitter.com/0SqpC6qHiL
— ANI (@ANI) April 23, 2024
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி, “ரொம்ப சந்தோசமாக இருக்குது. இன்றைக்கு மதுரையில் கள்ளழகர் அய்யா வைகை ஆற்றுல இறங்குற நாள். பல நூறு ஆண்டுகளாகவே இந்த வரலாறு தொடர்ந்துட்டு இருக்குது. தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண அழகர் வரும்போது ஒருநாள் தாமதமாகி விடுவது போன்ற வரலாறு இருக்கிறது. நான் சின்ன வயசுல எங்க அப்பா என்னை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு சாமியை பாருடான்னு சொல்லி லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்துக்கு நின்னு சொல்வாரு. ஒரு சாமி (அப்பா) தோள் மேல நின்னு இன்னொரு சாமியை பார்ப்பேன். அதன்பிறகு அப்பப்ப வந்துட்டு போய்கிட்டு இருப்பேன். சில வருடங்கள் அது மிஸ்ஸாகி விடும். இந்த வருடம் கண்டிப்பாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு வர வேண்டும் என நினைத்திருந்தேன். லட்சக்கணக்கான மக்கள் இங்கு இருக்கிறது சந்தோசமாக இருக்குது. அனைத்து சாதி, மத மக்கள் இங்கு ஒன்றிணைவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது. இந்த நாளில் நான் கலந்து கொள்வது ரொம்ப சந்தோசமாக, பெருமையாக இருக்கிறது.
மதுரை மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து வந்து அழகர் வருகையை கொண்டாடுவது சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் எந்தவித குளறுபடியும் இல்லாமல் இருக்கிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலகத்துக்கே முக்கியமான திருவிழா. இந்தியாவுக்கே பெருமை தரக்கூடிய விழா. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.