Amaran: அமரன் படம் பார்த்து அப்செட்டான இயக்குனர் வசந்தபாலன் - ஏன் என்னாச்சு?
அமரன் படத்தில் காஷ்மீர் மக்களின் வாழ்வியல் பற்றி விரிவாக பேசவில்லை என்று பிரபல இயக்குனர் வசந்தபாலன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக அமரன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அமரன் படத்தால் வசந்தபாலன் அப்செட்:
இந்த படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் புதிய உச்சத்தை கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காஷ்மீர் மற்றும் காஷ்மீர் பற்றி இந்த படத்தில் போதிய அளவு பேசவில்லை என்று விமர்சனமும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், அமரன் படம் குறித்து பிரபல இயக்குனர் வசந்தபாலன் கூறியிருப்பதாவது, “ இந்த படத்தை வழக்கமான காஷ்மீர் தீவிரவாத மற்றும் ராணுவ படமாகவே நினைத்து பார்க்காமல் விட்டுட்டோம். ஆனால், தொடர்ந்து இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. தீபாவளிக்கு ஊருக்குச் சென்றிருந்தபோது இந்த படத்தை பார்க்க முயற்சித்தேன். ஆனால், டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. கடந்த திங்கள்கிழமை சென்னை வந்த பின்பே படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், நினைத்ததற்கு மாறாக இந்த படம் காஷ்மீர் மக்களின் வாழ்வியலையும், அந்த மக்களின் வாழ்க்கை சூழலையும் அங்குள்ள அரசியலையும் பதிவு செய்யத் தவறிவிட்டனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சி:
ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்ஸ் தயாரித்துள்ளார். இந்திய ராணுவ வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மேஜர் முகுந்தனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படம் வெளியாகி ஒரு வாரத்தில் சுமார் 168 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இந்த படம் தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்தாக கூறி எஸ்டிபிஐ கட்சியினர் அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் அமரன் படத்தை வியந்து பாராட்டி வரும் சூழலில், இயக்குனர் வசந்தபாலன் மட்டும் இந்த படத்தில் காஷ்மீர் பற்றி விரிவாக பேசவில்லை என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.