Shanthanu Bhagyaraj: 'விஜய்யுடன் சண்டை, எனக்கென்று தனிப்பாடல்.. எல்லாத்தையும் தூக்கிட்டாங்க..' மாஸ்டர் படம் குறித்து சாந்தனு வேதனை..!
மாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து தான் பேசிய வீடியோ வைரலான நிலையில் நடிகர் சாந்தனு அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து தான் பேசிய வீடியோ வைரலான நிலையில் நடிகர் சாந்தனு அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
ஜூனியர் பாக்யராஜ்
இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகனான சாந்தனு, சக்கரக்கட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஏற்கனவே பாக்யராஜின் படம் ஒன்றில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் அவரின் அறிமுகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து தொடர்ந்து சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கோடிட்ட இடங்களை நிரப்புக,வானம் கொட்டட்டும், பாவக்கதைகள், முருங்கைக்காய் சிப்ஸ் என பல படங்களில் நடித்தார்.
இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் சாந்தனு பார்க்கவ் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். படம் வெளியாவதற்கு முன் மாஸ்டர் குறித்து ஏகப்பட்ட நேர்காணலில் புகழ்ந்து பேசியிருந்தார். ஆனால் மாஸ்டர் படம் வெளியான பின் அவரின் கேரக்டர் சமூக வலைத்தளங்களில் கடும் ட்ரோல் செய்யப்பட்டது.
மாஸ்டர் படம் குறித்து பேச்சு
இதனிடையே நேர்காணல் ஒன்றில், மாஸ்டர் படம் குறித்து சாந்தனு பல தகவல்களை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், “மாஸ்டர் மாதிரி பெரிய படம் கிடைக்குது. உண்மையிலேயே அந்த கேரக்டருக்கு கதை சொல்லும் போது மிகப்பெரிய ஸ்கோப் இருந்தது. ஆனால் படத்தின் நீளம் கருதி காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. இதனைத் தவிர்த்து விஜய் அண்ணாவுடன் நடிக்க யார் தான் வேண்டாம் என சொல்வார்கள்.
இவ்வளவு பெரிய படம், நல்ல கேரக்டர், எனக்கு பிடிச்ச விஜய் அண்ணாவுடன் நடிக்கப் போறேன், படத்துல வரவே போறதில்லைன்னா அது தெரிஞ்சும் நான் ஏன் யூட்யூப்ல பேட்டி கொடுக்கப்போறேன். எல்லோரும் அதை கலாய்ச்சாங்க. கொடுத்த பேட்டி அளவு கூட படத்துல இல்லையடான்னு சொன்னாங்க. அது தெரிஞ்சிதுன்னா யார் பேட்டி கொடுப்பா சொல்லுங்க. விஜய் நடித்த மாஸ்டர் படத்தை உலகளவில் உள்ள ரசிகர்கள் பார்ப்பார்கள்.
பார்கவை தெரியும்:
அங்க ஒரு 30,40 நிமிஷம் நம்ம முகம் ஸ்க்ரீன்ல தெரியுது. வெளிப்படையா சொல்லணும்னா, அடுத்த தலைமுறையினர் நான் எங்கேயாவது போகும் போது, அவனுக்கு சக்கரக்கட்டி படம் என்னன்னு தெரியாது. ஆனால் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற பார்கவ் கேரக்டரை அடையாளம் காட்டுவான்.
ஆனால் எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்றாக இருந்தது. அது என்னுடைய நேரமா என்ன என்பது தெரியல. 30 நாட்கள் என்னுடைய காட்சிகளை ஷூட் செய்தார்கள். ஆனால் கடைசியில் திரையில் வந்தது 12 நிமிடங்கள் தான். எனக்கு ஒரு தனி யூனிட் கொடுத்து நானும் விஜய் அண்ணாவும் சேர்ந்த சண்டை காட்சி, எனக்கும், கௌரிக்குமான தனிப்பாடல் என எல்லாம் இருந்தது” என தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் சாந்தனு மாஸ்டர் படத்தில் நடித்தது பற்றி தவறாக பேசியதாக விமர்சனம் எழுந்தது.
உண்மைதான்:
இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள சாந்தனு, “வருத்தப்பட்டேன் உண்மைதான், விமர்சனம் எதிர்கொண்டேன் உண்மைதான். ஆனால் நான் யாரையும் குறை சொல்லவில்லை! எல்லா தேர்வுகளும் எதிர்பார்த்தபடி சரியாக அமையாது. ஆனால் இது கற்றுக்கொண்ட விஷயம், மறக்க முடியாத அனுபவம்” என தெரிவித்துள்ளார்.