R Sarathkumar: நாட்டாமை சாதிப்படமா? .. யாரு சொன்னா? - டென்ஷனான சரத்குமார்!
இந்த காலத்தில் மக்கள் அனைவரும் சமம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அப்படியான நிலையில் பைசன் போன்ற படங்கள் வருகிறது. இந்த கால மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி சரத்குமாரிடம் கேட்கப்பட்டது.

குற்றம் என்ற ஒன்று பார்த்தால் சினிமாவில் நம்மால் படம் எடுக்க முடியாது என நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “ஒரு காலத்தில் எஜமான், தேவர் மகன், நாட்டாமை போன்ற படங்கள் வந்தது. சாதிய முரண்பாடுகள் இருந்தாலும் சரியோ, தவறோ அந்த காலத்தில் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இந்த காலத்தில் மக்கள் அனைவரும் சமம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அப்படியான நிலையில் பைசன் போன்ற படங்கள் வருகிறது. இந்த கால மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?. இன்னும் அந்த காலத்தில் வந்த சாதிய அடிப்படையிலான படங்களை கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது என நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
நாட்டாமை சாதியப்படமா?
அதற்கு பதிலளித்த சரத்குமார், ‘கொண்டாட வேண்டியதில்லை. ஆனால் மாரி செல்வராஜ் அவரின் கருத்துகளை சொல்கிறார். ஒரு நிகழ்வுகள் நடந்திருப்பதை சுட்டிக் காட்டுவது தவறு என சொல்ல முடியாது. ஆனால் நான் நடித்த நாட்டாமை படம் சாதிப்படம் என சொல்கிறீர்களே?. அதில் என்ன சாதி இருந்தது?. பஞ்சாயத்து பண்ணுவது சாதியில் வருமா? என கேள்வியெழுப்பினார்.
நாட்டாமை படம் சாதியப்படம் கிடையாது. அந்த படத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவர் தலைவராக, நல்ல தீர்ப்பு வழங்கக்கூடிய மனிதராக வருபவருடைய கதையாகும். தேவர் மகன் என்பது அந்த பகுதியில் படம் எடுத்ததால் அப்படி பெயர் வைத்தார்கள். ஆகவே சாதியை புகுத்த நினைக்கிறார்கள், அதனை வலுவாக சொல்கிறார்கள் என நாமாக நினைக்கக்கூடாது. எல்லாரும் மக்களின் பொழுதுபோக்கிற்காக படம் எடுக்கிறார்கள். குற்றம் என்ற ஒன்று பார்த்தால் நம்மால் படம் எடுக்க முடியாது.
என்னைப் பொறுத்தவரை இன்றைக்கு எல்லாருமே சமத்துவமாக இருக்க வேண்டும் என நான் சொல்பவன். சாதியைப் பற்றி அழுத்தமாக சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா என கேட்டால், ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை அதிக அழுத்தமாக சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால் நடந்ததை நடந்ததாக சொல்ல வேண்டியிருக்கிறது. நாம் இங்கு ஒற்றுமையாக செயல்பட்டு கொண்டு, ஒருங்கிணைந்து இருக்கிறோம். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு எல்லாருக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளது. இனிமேல் நடக்கக்கூடாது என சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
நாட்டாமை படம்
1994 ஆம் ஆண்டு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த படம் “நாட்டாமை”. இந்த படத்தில் விஜயகுமார், குஷ்பூ, மீனா, சங்கவி, மனோரமா, பொன்னம்பலம், கவுண்டமணி, செந்தில், ஈரோடு சௌந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சிற்பி இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.





















