Dr Ramadoss: திரைப்படமாகும் ராமதாஸ் வாழ்க்கை.. ஹீரோவாக சரத்குமார்? - வெளியான தகவல்!
பலவிதமான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தான் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று நிகழ்வுகள், வாழும், வாழ்ந்த பிரபலங்கள் பற்றியும் படங்கள் வருகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படமாக உள்ள நிலையில், அதில் ஹீரோவாக நடிப்பது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக மக்களையும், சினிமாவையும் எந்த காலக்கட்டத்திலும் பிரிக்க முடியாது. காதல், ஆக்ஷன், பக்தி, பேய் மற்றும் குடும்பக்கதை என பலவிதமான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தான் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று நிகழ்வுகள், வாழும், வாழ்ந்த பிரபலங்கள் பற்றியும் படங்கள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றது. தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா, பெரியார், காமராசர் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகி விட்டது.
அதேபோல் அம்பேத்கர், காந்தி, என்.டி.ராமாராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோர் பற்றியும் படங்கள் வந்துள்ளது. இப்படியான நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பற்றி திரைப்படம் உருவாக உள்ளது.
டாக்டர் ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கீழ்விசிறி கிராமத்தில் 1939 ஆம் ஆண்டு சஞ்சீவிராய கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதியினரின் 4வது மகனாக பிறந்தார் ராமதாஸ். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. இந்த தம்பதியினருக்கு அன்புமணி ராமதாஸ் என்ற மகனும், ஸ்ரீகாந்தி மற்றும் கவிதா ஆகிய இருமகள்களும் உள்ளனர்.
மருத்துவராக பணியாற்றிய ராமதாஸ், தான் சாந்த வன்னியர் சமுதாயத்தின் பின் தங்கிய நிலையை கண்டு, அதனை உயர்த்துவது பற்றி சிந்திக்க தொடங்கினார். அனைத்து துறைகளிலும் அந்த சமுதாய மக்கள் முன்னேற வேண்டும் என்ற முயற்சியில் வன்னியர் சங்கம் என்ற அமைப்பை 1980 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி தொடங்கினார். இது பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றம் கண்டது. முதலில் யானை சின்னத்தில் தேர்தலில் பங்கேற்ற பாமக, இப்போது மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
வாழ்க்கை வரலாற்று படம்
இதனிடையே பாமக வன்னியர் மக்களின் முன்னேற்றம் மட்டுமல்லாது தமிழ்நாடு மக்களின் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசியலிலும் தனக்கென வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமகவின் தற்போதைய தலைவராக அன்புமணி ராமதாஸ் உள்ளார். இப்படியான நிலையில் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கையை படமாக எடுக்கப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குநர், நடிகர் சேரன் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இப்படியான நிலையில் விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் ராமதாஸ் கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாததால் அதுவரை ரசிகர்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும்..!