Robo Shankar Profile: 5 முறை மிஸ்டர் மதுரை..ஜிம் மாஸ்டர் , நடன கலைஞர்...செய்யாத வேலையில்லை..ரோபோ சங்கரின் அசாத்திய பயணம்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமான செய்து திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக் குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படியான நிலையில் சிகிச்சை பலனின்றி துரைபாக்கம் மருத்துவமனையில் ரோபோ சங்கர் காலமானார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரில் குழந்தைகளின் மனம் கவர்ந்த கலைஞனாக இருந்த ரோபோ சங்கர் சினிமாவில் தனது இயல்பான நகைச்சுவை குணத்தால் மக்களை கவர்ந்தவர்.
யார் இந்த ரோபோ சங்கர்
மதுரையை சொந்த ஊராக கொண்ட ரோபோ சங்கர் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் எம்.ஏ பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ஐந்து முறை மிஸ்டர் மதுரை பட்டம் வென்றவர். சிறிய வயதிலேயே சினிமாவில் ஆர்வம் கொண்ட ரோபோ சங்கர் அபிநயா நடனக் குழுவில் நடன கலைஞராக பணியாற்றினார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற பிரபலங்கள் மாதிரி வேஷம் போட்டு மிமிக்ரி செய்வது என மதுரையில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். திருமணத்திற்கு பிறகு ஜிம் மாஸ்டராக சில காலம் பணியாற்றி வந்தார்.
உடலில் பெயிண்ட் பூசிக் கொண்டு ரோபோடிக் நடனமாடியதால் இவருக்கு ரோபோ சங்கர் என்கிற பெயர் உருவானது. உடலின் பெயிண்டை பூசிக்கொண்டு ஒரே நாளில் 9 நிகழ்ச்சிகள் செய்துவிட்டு, பகுதி நேரமாக ஜிம்மில் மாஸ்டராக பணியாற்றிக் கொண்டு வந்ததாக ரோபோ சங்கர் தெரிவித்தார்.
மிமிக்ரி கலைஞர்
தனது மனைவியின் பரிந்துரையின் பேரில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் முதல் போட்டியாளராக பங்கேற்றவர் ரோபோ சங்கர் தான் என்பது குறிப்பிடத் தக்கது. ரோபோ சங்கரின் ஜூனியராக வந்தவர் தான் சிவகார்த்திகேயன் . மிமிக்ரி கலைஞனாக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் தனது பல குரல் திறமையால் கூடிய விரைவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் மாதிரி ரோபோ சங்கர் மிமிக்ரி செய்வதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
நகைச்சுவை நடிகர்
2005 ஆம் ஆண்டு ஆர்.வி உதயகுமார் இயக்கிய கற்க கசடர படத்தில் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். பின் அடுத்தடுத்து தீபாவளி , ரெளத்திரம் , மதுரை வீரன் ஆகிய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். விஜய் சேதுபதியின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் ரோபோ சங்கருக்கு நகைச்சுவை நடிகராக மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின் அடுத்தடுத்து விஜய் , அஜித் , தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்தார். பின் விஜய் தொலைகாட்சியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்துகொண்டிருக்கிறார்
தீவிர கமல் ரசிகர்
சிறு வயதில் இருந்தே தீவிர கமல் ரசிகரான ரோபோ சங்கர் எல்லா கமல் படங்களையும் முதல் நாளே பார்த்துவிடுவார். கமலின் ஆளவந்தான் படத்தைப் பார்க்க முதல் நாள் மொட்டை அடித்துக் கொண்டு திரையரங்கத்திற்கு சென்றதாக ரோபோ சங்கர் ஒருமுறை பகிர்ந்துகொண்டார்.





















