கல்யாணத்துக்கு ரேவதி கூப்பிட்ட ஒரே ஒரு நடிகர் இவர்தான்.. யாருங்க அவரு?
பிரபல நடிகை ரேவதி தன்னுடைய திருமணத்திற்கு தமிழ் சினிமாவில் இருந்து ஒரே ஒரு நடிகரை மட்டுமே அழைத்தார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக உலா வருபவர் ரேவதி. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 1983ம் ஆண்டு தமிழில் அறிமுகமான இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், முரளி, மோகன் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
ஒரே சினிமா பிரபலம்:
நடிகை ரேவதி கடந்த 1986ம் ஆண்டு இவர் நடிகரும், இயக்குனருமாகிய சுரேஷ் சந்திரமேனனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் இவர்களது திருமணம் கேரளாவில் நடந்தது. நடிகை ரேவதி அவருடைய திருமணத்திற்கு அழைத்த ஒரே ஒரு நடிகர் மோகன் மட்டுமே ஆவார்.
ரேவதி திருமணத்திற்கு முன்பே ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், பாண்டியராஜ், முரளி என பலருடன் நடித்திருந்தாலும் திரையுலகைச் சேர்ந்த யாரையும் அவர் அழைக்கவில்லை. அவர் அழைத்த ஒரே ஒரு திரையுலக நண்பர் மோகன் மட்டுமே ஆவார். இதை மோகனே ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளார். மேலும், இதுதொடர்பாக பேசிய மோகன் நடிகை ரேவதி தன்னுடைய நெருங்கிய தோழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளி விழா நாயகன்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உலா வந்தவர் மோகன். 80 முதல் 90க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் ஏராளமான ப்ளாக்பஸ்டர் படங்களை அளித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்திற்கு நிகராக வெற்றிப்படங்களை அந்த காலத்தில் அளித்து வந்தார். இதன் காரணமாக அவரை வெள்ளி விழா நாயகன் என்றே ரசிகர்கள் அழைத்தனர்.
மோகன் ரேவதியுடன் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்த மெளனராகம் படம் இன்றும் பலராலும் கொண்டாடப்படும் படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் மோகன் - ரேவதி காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும்.
மோகன் - ரேவதி:
இந்த படம் மட்டுமின்றி நடிகை ரேவதி மோகனுடன் இணைந்து உதயகீதம், குங்கும சிமிழ், டிசம்பர் பூக்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளனர். இந்த ஜோடி நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் ஹிட் அடித்தது. அந்த நட்பு தற்போது வரை தொடர்கிறது என்றும் மோகன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் மோகன் தற்போது பெரியளவு படங்களில் நடிப்பதில்லை. அவர் கடைசியாக விஜய் நடித்த தி கோட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.




















